பதிவு செய்த நாள்
06
ஜூன்
2012
10:06
மதுரை: தமிழகத்தில் உள்ள 18 ஆதீனங்களை மிஞ்சும் வகையில் வாரிசாக இருப்பவர் நித்யானந்தா. நான் போர்க்குணம் உடையவன். அதுபோல் ஜாடிக்கேற்ற மூடியாக உள்ளார். அவர் என்னை விட உயரமானவர், என மதுரை ஆதீனம் புகழாரம் சூட்டினார். மதுரை ஆதீனம் மடத்தில், திருஞானசம்பந்தர் குருபூஜை விழா நேற்று நடந்தது. இதையொட்டி, மதுரை ஆதீனம் அருணகிரிக்கு, இளைய ஆதீனம் நித்யானந்தா கனகாபிஷேகம் செய்தார். தங்க சிம்மாசனத்தில், தங்க கிரீடம் அணிந்திருந்த ஆதீனத்திற்கு தங்ககாசுகள் மற்றும் மலர்களை கொண்டு அபிஷேகம் செய்தார். பின், தீபாராதனை காட்டப்பட்டது. பின், மதுரை ஆதீனம் பேசியதாவது: சிவன், பார்வதி கொடுத்த பரிசு நித்யானந்தா. நான் மறுத்தும், 40 ஆண்டுகால ஆதீன வாழ்க்கையில், நான் படைத்த சாதனைகளை கருத்திற்கொண்டு, "வாழ்நாள் சாதனையாளர் விருது என்ற அடிப்படையில், எனக்கு கனகாபிஷேகம் செய்துள்ளார். அவர் நூறு ஆண்டு வாழ்வார். நான் ஆண், பெண்ணிடம் அன்பாக நலம் விசாரிப்பேன். நகைச்சுவையாக பேசுவேன். அது போல் நித்யானந்தா உள்ளார். எவ்வளவு துன்பம் வந்தாலும் அவர் சிரித்து பழகும் விதம் எனக்கு பிடிக்கும். தமிழகத்தில் உள்ள 18 ஆதீனங்களை மிஞ்சும் வகையில் உள்ள வாரிசாக இருப்பவர் நித்யானந்தா. இவரை போல் "ஆஜானுபாகுவான ஒருவரை பார்க்க முடியுமா "இவருக்கு பட்டம் சூட்டு என சிவன் என்மனதில் கூறினார். நான் போர்க்குணம் உடையவன். அதுபோல் ஜாடிக்கேற்ற மூடியாக நித்யானந்தா உள்ளார். அவர் என்னை விட "உயரமானவர். எங்களை அவதூறு பேசியவர்கள் ஓடிவிட்டனர். ஆதீன மீட்பு குழு, பாதுகாப்பு குழுவிடம் விசாரித்த ஆர்.டி.ஓ., "ஓராண்டு ஆதீனம் பக்கமே போகக்கூடாது என எதிர்ப்பாளர்களை எச்சரித்தது எங்களுக்கு கிடைத்த வெற்றி. எங்கள் மீது வழக்கு தொடர்ந்தவர்கள், தொடர போகிறவர்கள் தோல்வி அடைவர், என்றார். பின், மீனாட்சி அம்மன் கோயிலில் இருந்து மருதுபாண்டியர் செய்து கொடுத்த வெள்ளித்தேரில், திருஞானசம்பந்தர் வீதி உலா நடந்தது.