பதிவு செய்த நாள்
17
மார்
2021
11:03
பெ.நா.பாளையம்: பெரியநாயக்கன்பாளையம் ராமகிருஷ்ண மிஷன் வித்யாலயத்தில் ஸ்ரீ ராமகிருஷ்ணரின், 186 வது பிறந்தநாள் விழா கொண்டாடப்பட்டது.
அதிகாலை மங்கள ஆராத்தியுடன் விழா துவங்கியது. வித்யாலயா கல்வி நிறுவனங்களின் செயலாளர் சுவாமி கரிஷ்டானந்தர், விழாவை துவக்கி வைத்தார். மாணவர்கள் மற்றும் வித்யாலய குடியிருப்பு பகுதிகளில் வசிக்கும் பக்தர்கள் பங்குபெற்ற பஜனை நிகழ்ச்சி, ஆன்மிக சொற்பொழிவு ஆகியன நடந்தன. சொற்பொழிவில், ராமகிருஷ்ண மிஷன் வித்யாலயா கலை, அறிவியல் கல்லூரியின் செயலாளர் சுவாமி நிர்மலேஷானந்தர், ராமகிருஷ்ணர் வாழ்க்கை வரலாறு குறித்து பேசினார். தொடர்ந்து, மகா ஹோமம் நடந்தது. மாணவர்கள் மற்றும் பக்தர்கள் சுமார், 500க்கும் மேற்பட்டோர் விழாவில் கலந்து கொண்டனர். மாலையில் பகவான் ஸ்ரீ ராமகிருஷ்ணர் பல்லக்கு திருவீதி உலா ஊர்வலம் நடந்தது. இதில், பெரியநாயக்கன்பாளையம் டி.எஸ்.பி., கிருஷ்ணமூர்த்தி, வித்யாலயா நிறுவனங்களில் பணிபுரியும் முதல்வர்கள், ஆசிரியர்கள், பணியாளர்கள் மற்றும் பக்தர்கள் கலந்துகொண்டனர். அலுவலக குடியிருப்புகள் வழியாக சென்ற ஊர்வலம், இறுதியாக ராமகிருஷ்ணர் கோவிலில் நிறைவடைந்தது. வாணவேடிக்கை நிகழ்ச்சி நடந்தது. இதில், சுவாமிஜிக்கள், பிரம்மச்சாரிகள் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.