பழநி: பழநி முருகன் கோயிலில் பங்குனி உத்திரத் திருவிழா மார்ச் 22 முதல் மார்ச் 31 வரை 10 நாட்கள் நடைபெற உள்ளது. இதற்கான ஆலோசனை கூட்டம் பழநி ஆர்டிஒ அலுவலகத்தில் நேற்று நடைபெற்றது. ஆர்டிஓ ஆனந்தி தலைமையில் நடைபெற்ற கூட்டத்தில் நிலையான அறிவுறுத்தலின்படி திருவிழா நடத்த ஆலோசிக்கப்பட்டது. பழநி பங்குனி உத்திர திருவிழா மார்ச் 22 அன்று காலை 9:20 மணிக்கு மேல் 10:20 மணிக்குள் திருஆவினன்குடி கோயிலில் கொடியேற்றத்துடன் துவங்கும். விழாவின் முக்கிய நிகழ்ச்சியான திருக்கல்யாணம் மார்ச் 27ம், திருத்தேரோட்டம் மார்ச் 28ம் நடைபெறும். மார்ச் 31 அன்று பங்குனி உத்திர விழா நிறைவடைகிறது
இவ்விழாவில் பக்தர்களுக்கு கொரானா பரவல் தடுப்பு நடவடிக்கைகள் எடுக்க ஆலோசிக்கப்பட்டது. இதில் பக்தர்கள் 25 ஆயிரம் பேர் உடல் வெப்ப பரிசோதனைக்கு பின்பு தரிசனத்திற்கு அனுமதிக்கப்படுவர். கோயில் பகுதியில் தற்காலிக மருத்துவ மையங்கள் ஏற்படுத்தப்படும். பக்தர்களுக்கு கழிப்பிட வசதிகள் குடிநீர் வசதிகள் ஏற்படுத்தப்படும். சுகாதாரத்துறையினர் சோதனைகள் முக கவசம், சானிடைசர் உபயோகிப்பதை கண்காணிக்க நடவடிக்கை எடுத்துள்ளனர். இக்கூட்டத்தில் தாசில்தார் வடிவேல் முருகன், பழநி கோயில் துணை ஆணையர் செந்தில்குமார், டிஎஸ்பி சிவா உட்பட அதிகாரிகள் பலர் கலந்து கொண்டனர். ஆலோசனைக்கு பின்பு ஆர்டிஓ தலைமையில் குடமுழுக்கு மண்டபம், தானியங்கி உடல் வெப்ப பரிசோதனை கருவிகள் செயல்படும் முறை ஆய்வு செய்யப்பட்டது.