குளித்தலை: குளித்தலை அருகே, மேட்டு மகாதானபுரத்தில், அங்காளம்மன், மலையாள கருப்புசாமி கோவில் திருவிழா நிறைவு பெற்றது. மகாதானபுரம் பஞ்., மேட்டு மகாதானபுரத்தில் எழுந்தருளியிருக்கும் அங்காளம்மன், மலையாள கருப்புசாமி கோவில் திருவிழாவில் இறுதி நாளான நேற்று முன்தினம் இரவு, கண்கவர் கலைநிகழ்ச்சிகள் நடந்தன. கடந்த, 12ல் தொடங்கிய திருவிழாவில் தமிழகத்தில் உள்ள ஏராளமான திருநங்கைகள் இத்திருக்கோவிலுக்கு வந்து பொங்கல் வைத்து மாவிளக்கு எடுத்து, அலகு குத்தி, அக்னி சட்டி எடுத்தல் உள்ளிட்ட நேர்த்திக்கடன்களை செலுத்தினர். 13 மாலை, 6:00 மணியளவில் மயான கொள்ளை நிகழ்ச்சி, அம்மன் திருவீதி உலா நடந்தது. இத்திருவிழாவில் தமிழகத்தில் உள்ள ஏராளமான திருநங்கைகள் கோவிலில் தங்கி வழிபட்டு தங்கள் நேர்த்திக் கடன்களை செலுத்தினர்.