காஞ்சி மகாபெரியவரைத் தரிசிக்க மடத்தில் பக்தர்கள் கூடியிருந்தனர். அப்போது கூடத்தின் குறிப்பிட்ட இடத்தில் நாலைந்து வெற்றிலைகள் தரையில் சிதறிக் கிடந்தன. பக்தர் யாரோ கொண்டு வந்தது தவறி கீழே விழுந்திருக்கலாம். வெற்றிலை மங்கலப்பொருள் என்பதால் கால்மிதி படாமல் பக்தர்கள் விலகிச் சென்றனர். அதைக் கண்ட மகாபெரியவர் பிரசாதம் கொடுப்பதை நிறுத்தி விட்டு, மடத்து பணியாளரை அழைத்தார். வெற்றிலைகளை எடுத்து தண்ணீரில் கழுவி விட்டு தன்னிடம் கொண்டு வருமாறு கட்டளையிட்டார். பொதுவாக துறவிகள் தாம்பூலம் தரிப்பதில்லை. அப்படியிருக்க மகாபெரியவர் இப்படி சொன்னதையும், வெற்றிலையைச் சுத்தப்படுத்தி வந்து பணியாளர் அவர் அருகில் வைத்ததையும் அனைவரும் வியப்புடன் பார்த்தனர். பக்தர்களின் வரிசை நகர்ந்து கொண்டிருந்தது. சற்று தள்ளி ஒரு கர்ப்பிணி நின்றிருந்தாள். திடீரென மயக்கம் வந்ததால் தலையில் வைத்தபடி அப்பெண் கீழே உட்கார்ந்தாள். அவளுடன் வந்தவர்களுக்கு என்ன செய்வதெனத் தெரியவில்லை. அதைப் பார்த்த மகாபெரியவர், ‘‘இந்த வெற்றிலைகளை கர்ப்பிணியிடம் கொடுத்து தின்னச் சொல்’’ என பணியாளரிடம் கொடுத்தார். கர்ப்பிணியும் வெற்றிலையை வாயில் இட்டு மென்றாள். என்ன ஆச்சரியம்! உடனடியாக மயக்கம் தீர்ந்தது. கர்ப்பிணி மகிழ்ச்சியுடன் மகாபெரியவரை வணங்கினாள். அவள் முறை வந்ததும் கைநீட்டிப் பிரசாதமும் வாங்கினாள். ‘‘வெற்றிலைக்கு தலைச்சுற்றலைத் தடுக்கும் சக்தி உண்டு தெரியுமோ? இதெல்லாம் இயற்கை வைத்தியம். காந்திஜி இது பற்றி நிறைய எழுதியிருக்கிறார். இயற்கை வைத்தியத்தில் (ராம நாமம் என்னும் மாமருந்து இருக்கு. நேரம் கிடைக்கும் போதெல்லாம் ‘ராம... ராம...’ என ஜபித்துக் கொண்டிரு.) bkt அம்பாள் கடாட்சத்தால் உனக்கு நல்ல குழந்தை பிறக்கும்! தைரியமாக இரு!’’ என ஆசியளித்தார். அவளது விழிகளில் ஆனந்தக்கண்ணீர் வழிந்தது.