பொறியியல் பட்டம் பெற்ற ராம்ஜி புதிய வேலையில் சேர்ந்து ஒரு மாதமாகி இருந்தது. ஆனால் அதில் திருப்தி இல்லை. சோர்வுடன் வீட்டுக்கு வந்தான். பேரனின் முகவாட்டம் கண்ட தாத்தா, ‘‘என்னடா... டல்லா இருக்கே என்ன பிரச்னை?’’ எனக் கேட்டார். ‘‘தாத்தா... எனக்கு மட்டும் ஏன் இப்படி நடக்குது. என்கூட படிச்ச எல்லோரும் நல்ல வேலையில நிறைய சம்பளம் வாங்குறாங்க. நான் மட்டும் வேண்டா... வெறுப்பா வேலைக்கு போயிட்டிருக்கேன்’’ என்றான் ராம்ஜி. ‘‘ வருத்தப்படாதே... உலகத்தில அவரவருக்கு உரிய பணி நிச்சயம் இருக்கும். உனக்கு வேண்டியதை கொடுக்க கடவுள் காத்திருக்கார். நான் சொல்லப் போற கதையை கேளு. உண்மை புரியும்.’’ என்றார் தாத்தா. ஒரு ஊருல மண்பாண்டம் செய்பவர் ஒருவனும், வைரத்துக்குப் பட்டை தீட்டும் ஒருவனும் நண்பர்களாக இருந்தனர். அடிக்கடி சந்திக்கும் அவர்கள் தொழிலில் உள்ள பிரச்னை பற்றியே பேசுவர். ‘‘கடவுள் ஏன் தான் எனக்கு மண்பாண்டம் செய்யும் வேலையைக் கொடுத்தாரோ தெரியலை. நாளெல்லாம் களிமண்ணை மிதிச்சே காலம் போகுது. பானைகளை விற்பதற்காக வெயிலில் அலைஞ்சு நொந்து போறேன்’’ என்பான் மண்பாண்டம் செய்பவன். ‘‘ உன் பாடு கூட தேவலைப்பா. வைரங்களைப் பட்டை தீட்டும் மதிப்பான பணி என்று தான் எனக்கு வெளியில பேச்சு. ஆனா பட்டை தீட்டுற போது என் கைகளில் எத்தனை முறை காயம் பட்டிருக்கு தெரியுமா? கூர்ந்து பார்த்துப் பார்த்து என் பார்வையும் மங்கிப் போச்சு’’ என்று தன் பங்குக்கு அவனும் புலம்புவான். இருவரும் ஒருமுறை துறவியைச் சந்தித்து தீர்வு கேட்டனர். ‘‘நீங்கள் செய்யும் வேலையைத் தவிர வேறு வேலை உங்களுக்குத் தெரியுமா? எனக் கேட்டார் துறவி. ‘‘தெரியாது’’ என்றனர். மண்பாண்டங்களும், பட்டை தீட்டப்பட்ட வைரங்களும் இயற்கையாகவே கிடைத்தால் உங்க நிலைமை என்னாகும்? எனக் கேட்டார் துறவி. ஒரே குரலில், ‘‘எங்கள் பொழைப்பு போய் விடும்’’ என்றனர். பலமாகச் சிரித்தார் துறவி. ‘‘உலகில் தேவைகள் இருப்பதால் தானே உங்களுக்கு வேலை கிடைக்கிறது. தேவைகளை நிறைவேற்றும் திறமை இருப்பதால்தானே மக்களும் உங்களைத் தேடி வருகிறார்கள். அதை எண்ணி பெருமையல்லவா படவேண்டும்? அதை விட்டு கவலைப்படுகிறீர்களே நியாயமா? தேவைகளை தனக்கு கிடைத்த வாய்ப்பாக கருதுபவன் மகிழ்ச்சியுடன் வாழ்கிறான். சிரமங்களை மட்டுமே சிந்திப்பவன் நிம்மதி இழக்கிறான்’’ என்றார். உண்மையை உணர்ந்த அவர்கள் பெருமிதத்துடன் புறப்பட்டனர். ‘‘ராம்ஜி... உனக்கும் உண்மை புரிந்திருக்கும். வேலையை ஆர்வமுடன் செய். ஒளிமயமான எதிர்காலம் என் உள்ளத்தில் தெரிகிறது’’ என்றார் தாத்தா.