பதிவு செய்த நாள்
17
மார்
2021
06:03
தம்மை அணுகியோரின் கர்மவினைகளை நொடிப் பொழுதில் மாற்றக் கூடிய ஆற்றல் பெற்றிருந்த மகான், சத்குரு ஸ்ரீ சேஷாத்ரி சுவாமிகள். திருவண்ணாமலை மகான்களில் மாறுபட்டவராய், மிகப்பெரிய தவசீலராய், சித்தபுருஷராய் விளங்கியவர்.
சுவாமிகள் மீது வெளியூர் பக்தர்கள் சிலர் மிகுந்த பற்று வைத்திருந்தனர். ஒரு சமயம் சுவாமிகளைத் தரிசனம் செய்ய வந்த அவர்கள், அவரைக் கையோடு தங்கள் ஊருக்குக் கூட்டிச் செல்ல முடிவெடுத்தனர். சுவாமிகள் மறுத்தும் கேளாமல், அவரை அப்படியே கட்டிப்பிடித்து, தங்கள் கையோடு கூட்டிக் கொண்டுபோய் ரயில் ஏறி விட்டனர்.
ரயிலும் புறப்பட்டு விட்டது. திருவண்ணாமலை எல்லையைத் தாண்டும் சமயம், ஓடும் ரயிலிலிருந்து சுவாமிகள் கீழே குதித்து விட்டார். அவர் உடம்பெல்லாம் காயம். இரயிலும் நின்று விட்டது. கார்டும் டிரைவரும் வந்தனர். சுவாமிகளைக் குற்றம் சாட்டினர். சுவாமிகளைக் காவல் நிலையத்தில் ஒப்படைக்க வேண்டும் என்று பேச்சுக் கிளம்பியது. அவ்வாறே சுவாமிகளைக் கைது செய்து சிறையில் அடைப்பதற்காக, அவரைக் குண்டுக் கட்டாக மீண்டும் ரயிலில் ஏற்றினர். டிரைவரும் ரயிலைக் கிளப்பினார். ரயில் ஓர் அங்குலம் கூட நகரவில்லை. டிரைவர் பலமுறை முயற்சி செய்தும் பலனில்லை. வண்டி நகரவே இல்லை.
இந்த நிகழ்ச்சியைப் பார்க்கக் கூட்டம் சேர்ந்து விட்டது. அதில் சேஷாத்ரி சுவாமிகளை நன்கு அறிந்த பக்தர்கள் சிலரும் இருந்தனர். நடந்ததை அறிந்த அவர்கள், கார்டிடமும், டிரைவரிடமும், சுவாமிகளின் பெருமையை விளக்கிச் சொல்லி அவரை விடுவிக்கும்படி வேண்டினர். சுவாமிகளை வற்புறுத்திக் கூட்டிவந்த பக்தர்களையும் கண்டித்தனர். டிரைவரும், கார்டும் தங்கள் செயலுக்காக வருந்தி சேஷாத்ரி சுவாமிகளிடம் மன்னிப்புக் கேட்டனர். சுவாமிகளைக் கூட்டிக்கொண்டு சென்ற பக்தர்களும், தங்களை மன்னிக்குமாறு வேண்டினர். சேஷாத்ரி சுவாமிகள் ரயிலிலிருந்து கீழே இறக்கி விடப்பட்டார். ரயிலிலிருந்து கீழே இறங்கியதும் உரத்தகுரலில் ‘ஹா ஹா’வெனச் சிரித்தார் சுவாமிகள். உடன் டிரைவர் ரயிலைக் கிளப்ப முயற்சித்தார். அது கிளம்பவில்லை. உடனே ரயிலை மெதுவாகத் தடவிக் கொடுத்த சேஷாத்ரி சுவாமிகள், ‘ம்... ம்... போ, போ’ என்றார். உடன் ரயில் எந்தத் தடங்கலுமில்லாமல் புறப்பட்டுவிட்டது. காண்போர் வியக்கும்வண்ணம் நடந்த அற்புத நிகழச்சியின் மூலம் மகான் ஸ்ரீ சேஷாத்ரி சுவாமிகளின் பெருமை மூலை முடுக்கெல்லாம் பரவியது. பலரும் அவரை நாடி வந்து வணங்க ஆரம்பித்தனர். பல்லாயிரக்கணக்கான மக்களின் வாழ்க்கை உயர்வுக்குக் காரணமான மகான் சத்குரு ஸ்ரீ சேஷாத்ரி சுவாமிகளின் அற்புத வரலாற்றை அறிய, தாமரை பிரதர்ஸ் மீடியா பிரைவேட் லிமிடெட் வெளியீடான, பா.சு.ரமணன் எழுதிய ‘ஸ்ரீ சேஷாத்ரி ஆயிரம்’ புத்தகத்தை வாங்கிப் படியுங்கள்.