ராமேஸ்வரம்: 10 ஆண்டுகளுக்கு பின் ராமேஸ்வரம் ராமநாதசுவாமி கோயிலில் தங்கத்தேர் சோதனை ஓட்டம் நடந்தது.2001ல் ராமேஸ்வரம் கோயிலில் 4 கிலோ தங்கத்தில் 20 அடி உயரத்தில் தங்கத்தேர் அமைக்கப்பட்டது.
தேர் முகப்பில் 4 வெள்ளி குதிரைகள் பொருத்தி, சாரதியாக பிரம்மா அமர்ந்திருப்பார். கலைநயமிக்க இந்த தங்கத் தேரை பக்தர்கள் ரூ. 2 ஆயிரம் நன்கொடை செலுத்தி கோயில் 3ம் பிரகாரத்தில் இழுத்து நேர்த்திக்கடன் செலுத்தி வந்தனர்.தேரில் தங்கம் குறைவு, தேர் பலவீனம் உள்ளிட்ட காரணங்களினால் 10 ஆண்டுகளாக தங்கரத உலா நிறுத்தப்பட்டிருந்தது. கோயில் புதிய இணை ஆணையராக பொறுப்பேற்ற பழனிக்குமார், தங்க தேரை இயக்க முடிவு செய்தார்.நேற்று இரவு கோயிலில் இருந்து பர்வதவர்த்தினி அம்மன் புறப்பாடாகி அலங்கரித்த தங்க தேரில் எழுந்தருளினார். கோயில் மேலாளர் சீனிவாசன், பேஷ்கார் அண்ணாதுரை, கோயில் ஊழியர்கள் தங்கத்தேரை கோயில் 3ம் பிரகாரத்தில் இழுத்து வந்து சோதனை ஓட்டம் நடத்தினர். தேர் நல்ல நிலையில் உள்ளதால் பக்தர்கள் ரூ.4500 செலுத்தி தங்கத் தேரை இருக்கலாம் என ஊழியர்கள் தெரிவித்தனர்.