பதிவு செய்த நாள்
19
மார்
2021
01:03
கோவை: கோவில் அடிமை நிறுத்து என்ற பெயரில் ஈஷா நிறுவனர் சத்குரு தொடங்கியுள்ள இயக்கத்துக்கு, பக்தர்கள் மத்தியில் ஆதரவு அதிகரித்து வருகிறது.
தமிழகத்தில் பழம் பெருமை வாய்ந்த கோவில்கள் பல, சிதிலமடைந்து காணப்படுகின்றன. உரிய முறையில் தொடர் பராமரிப்பு இல்லாத காரணத்தால், பல நுாறு கோவில்கள் சிதிலமடையும் நிலையை நோக்கி சென்று கொண்டிருக்கின்றன. இதற்கு முக்கிய காரணம், கோவில்கள் அரசு துறையினரிடம் இருப்பது தான். இதற்கு தீர்வாக, கோவில்களில் இருந்து அரசு வெளியேற வேண்டும்; அதை ஆன்மிக ஆர்வம் கொண்ட ஹிந்து சமயத்தவர் வசம் ஒப்படைக்க வேண்டும் என்ற கோரிக்கை வலுத்து வருகிறது.
சமீபத்தில் இந்த கோரிக்கையை வலியுறுத்தி, ஈஷா யோகா மைய நிறுவனர் சத்குரு, கோவில் அடிமை நிறுத்து என்ற இயக்கத்தை தொடங்கினார். இதற்கு பல்வேறு தரப்பில் இருந்தும் ஆதரவு பெருகி வருகிறது.இந்த இயக்கத்தினர், ஒவ்வொரு மாவட்டத்திலும் பராமரிப்பின்றி, சிதிலமடைந்து கிடக்கும் கோவில்களின் நிலை குறித்து அறியும் முயற்சியை தொடங்கியுள்ளனர். இதற்கென பொதுமக்கள், பக்தர்களின் உதவியை நாடியுள்ளனர். அதன்படி, பக்தர்கள், தங்கள் ஊரில் ஹிந்து சமய அறநிலையத் துறை கட்டுப்பாட்டில் இருக்கும் சிதிலமடைந்த புராதான கோவில்கள் குறித்த விவரங்களை 83000 83000 என்ற எண்ணுக்கு வாட்ஸ் ஆப் மூலம் அனுப்பி வைக்கலாம்.
புகைப்படம் அல்லது வீடியோ அல்லது அனுபவ பகிர்வாக, தகவல்களை அனுப்பி வைக்கலாம். இந்த இயக்கத்துக்கு ஆதரவு தெரிவிக்க, இந்த எண்ணுக்கு, மிஸ்டு கால் தரவும் செய்யலாம். புகைப்படம், வீடியோ, அனுபவ பகிர்வு அனுப்புவோர், கீழ்க்கண்ட தகவல்களையும் சேர்த்து அனுப்பி வைக்க வேண்டும். அனுப்புபவர் பெயர், மொபைல் எண், ஊர், மாவட்டத்தின் பெயர், கோவில் பெயர், கோவில் இருக்கும் ஊர், மாவட்டத்தின் பெயர் ஆகிய விவரங்கள் வேண்டும். எத்தனை ஆண்டுகள் பழமையான கோவில், கோவில் இந்து அறநிலையத்துறையின் கட்டுப்பாட்டில் உள்ளதா, தினசரி பூஜைகள் சரியாக நடக்கிறதா, கோவில் சிற்பங்கள், துாண்கள், கல்வெட்டுகள் முறையாக பராமரிக்கப்பட்டு வருகிறதா என்ற விவரங்களும் அவசியம் தேவை.கடைசியாக எப்போது கும்பாபிஷேகம் நடந்தது, கோவில் துாய்மையாக பராமரிக்கப்படுகிறதா என்று தெரிவிப்பதுடன், கூடுதல் தகவல்கள் இருந்தாலும் தெரிவிக்கலாம் என்று, ஈஷா யோகா அமைப்பினர் தெரிவித்துள்ளனர்.