ஒருமுறை முல்லா இந்தியாவில் பயணம் செய்த போது துறவி ஒருவரைக் கண்டார். ‘‘என் போன்ற தத்துவ அறிஞனுக்கும், உங்களைப் போன்ற துறவிக்கும் பகிர்ந்து கொள்ள நிறைய விஷயம் இருக்கும்’’ என்றார். ‘‘நான் ஒரு துறவி. மனிதர்கள் மட்டுமே இந்த உலகின் மையம் அல்ல. பறவை, விலங்குகள் என எல்லா உயிர்களும் சேர்ந்தே இந்த உலகை அழகுபடுத்துகின்றன. உலகின் மீதே என் கவனம் இருக்கிறது’’ என்றார் துறவி. ‘‘இந்த மேலான பணியில் என்னையும் அனுமதியுங்கள். நம் இருவரும் ஒரே கருத்து கொண்டவர்கள். ஏனெனில் ஒருமுறை என் உயிரையே சிறிய உயிரினம் ஒன்று தான் காப்பாற்றியது’’ என்றார் முல்லா. ‘‘எத்தனை அற்புதம்! உங்களை நண்பராக ஏற்பதில் மகிழ்ச்சியடைகிறேன். நம் இருவரின் சித்தாந்தமும் ஒன்றாக இருப்பது உறுதியாகிறது’’ என்றார் துறவி. சிறிய உயிர் ஒன்று தங்களின் உயிரைக் காப்பாற்றிய அனுபவத்தை இன்னும் நீங்கள் சொல்லவில்லையே’’ எனக் கேட்டார் துறவி. ‘‘அந்த அனுபவத்தை சரியாக விவரிக்க முடியுமா எனத் தெரியவில்லை’’ என தயங்கினார். ‘‘என் அறிவை விசாலப்படுத்தும் நோக்கத்தில் தான் கேட்கிறேன். தயவு செய்து கூறுங்கள்’’ என்றார் துறவி. ‘‘சரி இவ்வளவு துாரம் கேட்பதால் சொல்கிறேன். ஆனால் நீங்கள் ஏற்பீர்களா என்பது தெரியவில்லை. மீன் ஒன்று என் உயிரை காப்பாற்றியது. அதைப் பார்த்த போது கடும்பசியில் இருந்தேன். மூன்று நாட்கள் எனக்கான உணவாகி உயிரை காப்பாற்றியது’’ என்றார் முல்லா. ஏதும் பேச முடியாமல் வாயடைத்துப் போனார் துறவி.