பதிவு செய்த நாள்
22
மார்
2021
11:03
பொள்ளாச்சி:பொள்ளாச்சியில் ஒத்திவைக்கப்பட்ட மாரியம்மன் கோவில் தேர்த்திருவிழா நடத்த, கோவில் நிர்வாகம் முடிவு செய்து, வரும், 20ம் தேதி நோன்பு சாட்டுதல் துவங்குகிறது, என, அறிவிக்கப்பட்டுள்ளது. இதனால், வேண்டுதலுடன் காத்திருந்த பக்தர்கள் மகிழ்ச்சியடைந்தனர்.
பொள்ளாச்சி மாரியம்மன் கோவில் திருவிழாவில், வெள்ளித்தேரோட்டம் மூன்று நாட்கள் நடைபெறுவது வழக்கம். கடந்தாண்டு முதல் கொரோனா பாதிப்பு காரணமாக ஊரடங்கு அமலில் உள்ளது. இந்நிலையில், கொரோனா பாதிப்பு குறைந்து வருவதால் அதற்கேற்ப தளர்வுகளும் அறிவிக்கப்பட்டு வருகின்றன. மாரியம்மன் கோவில் திருவிழா நடைபெறும் என்ற எதிர்பார்ப்பு மக்களிடம் நிலவியது.கோவில் நிர்வாகம் சார்பில் தேர்த்திருவிழா, கொரோனா தொற்று அச்சம் காரணமாக பொதுமக்கள் நலன் கருதி தள்ளி வைக்கப்படுகிறது, என, அறிவிக்கப்பட்டது. இதற்கு இந்து அமைப்புகள், பக்தர்கள் ஆட்சேபனை தெரிவித்தனர். இந்நிலையில், கோவில் நிர்வாகம் தேர்த்திருவிழா நடத்த முடிவு செய்து அறிவிப்பு வெளியிட்டுள்ளது. கோவில் முன்பாக வைக்கப்பட்டுள்ள அறிவிப்பும் வைக்கப்பட்டுள்ளது. வரும், ஏப்., 20ம் தேதி நோன்பு சாட்டுதல் நிகழ்ச்சியுடன், தேர்த்திருவிழா துவங்குகிறது.ஏப்., 27ம் தேதி கரியகாளியம்மனுக்கு அபிேஷகம், இரவு, 11:00 மணிக்கு கம்பம் நடுதல்; மே 4ம் தேதி பூவோடு வைத்தல், மே 8ம் தேதி கொடி கட்டுதல், 12ம் தேதி மாவிளக்கு பூஜை, திருக்கல்யாண உற்சவம், தேரோட்டம் முதல் நாள் நிகழ்ச்சி நடக்கிறது.மே 14ம் தேதி தேர் நிலைநிறுத்தம், தெப்பத்தேர் வைபவம்; 17ம் தேதி மகா அபிேஷகம் உள்ளிட்ட பூஜைகள் நடைபெறுகிறது. கோவில் அதிகாரிகள் கூறுகையில், ஒத்தி வைக்கப்பட்ட திருவிழா நடத்த முடிவு செய்யப்பட்டுள்ளது; 20ம் தேதி நோன்பு சாட்டுதல் நிகழ்ச்சியுடன் திருவிழா துவங்கப்படும், என்றனர்.மாரியம்மன் கோவில் தேர்த்திருவிழாவுக்கான அறிவிப்பை, கோவில் நிர்வாக வெளியிட்டுள்ளதால், வேண்டுதலுடன் காத்திருந்த பக்தர்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.