‘‘ஆண்டவரே! எனக்கு பாவ மன்னிப்பு கொடும். அப்படி பெரிதாக ஒன்றும் செய்யவில்லை. ஏதோ ஒரு கையெழுத்து போட இரண்டாயிரம் ரூபாய் கேட்டேன். அந்தப் பாவி ஆயிரம் தான் கொடுத்தான். இதையும் எனக்காகவா வாங்கினேன்? என் மகள் பிறந்த நாளுக்கு கேக் வேண்டுமென அடம் பிடித்தாள். அவளுக்காக கை நீட்டி விட்டேன். இருந்தாலும், எனக்கு ஆயிரம் ரூபாய் கொடுத்த அவனுக்கு, வேறு வகையில் அந்த பணத்தைத் திருப்பிக் கொடும்’’ என்று ஒரு மனிதன் ஜெபம் செய்தால் ஆண்டவர் என்ன நினைப்பார்? ‘‘நரம்பில்லாத நாக்கு கொண்டவனே! தப்பு செய்ததையும் ஒப்புக் கொண்டு, அதற்கு நியாயம் வேறு கற்பிக்கிறாயா... உன்னால் துன்பத்திற்கு ஆளானவருக்கு சிபாரிசு வேறு செய்கிறாயா?’’ என்று தானே சொல்வார். வெறுங்கண்ணால் பார்த்தால் காற்றில் உள்ள துசி தெரியாது. அதே நேரம் சூரிய ஒளி ஜன்னல் வழியாக அறைக்குள் புகுந்தால் அதன் வெளிச்சத்தில் துாசி மிதப்பது தெளிவாகத் தெரியும். அதுபோல உன் தவறுக்காக முழங்காலிட்டு, ‘‘இந்த தவறை மீண்டும் செய்ய மாட்டேன். என்னால் பாதிப்பு அடைந்தவரிடம் சென்று மன்னிப்பு கேட்பேன். அவனுக்கு ஏற்பட்ட நஷ்டத்தை ஈடு செய்வேன்’’ எனக் கண்ணீர் விட்டு கதறுபவனின் ஜெபம் மட்டுமே ஏற்கப்படும். நல்லதைப் பேசவும், நல்லதை சாப்பிடவும் மட்டுமே நமக்கு வாய் கொடுக்கப்பட்டுள்ளது. மற்றவர்களை எடுத்தெறிந்து பேசுவது, பொய் சொல்வது, புறம் பேசுவது போன்ற செயல்கள் நாக்கை களங்கப்படுத்தும் செயலாகும். ஐம்புலன்களில் வாயானது சாப்பிடுவதல், பேசுதல் என இரு பணிகளைச் செய்கிறது. வாயை நல்ல சொற்களை பேச மட்டும் பயன்படுத்துவோம். ‘‘உதடுகள் பாவம் செய்யாதபடி ஜாக்கிரதையாய் இருங்கள். துதித்தலும், சபித்தலும் ஒரே வாயிலிருந்து புறப்படலாமா?’’ என்கிறது பைபிள்.