தாய்லாந்தின் தலைநகர் பாங்காக் நகரின் முக்கிய வணிக வீதியில் பிரபலமான பிரம்மா கோயில் உள்ளது. எரவான் கோயில் என்னும் அந்நாட்டு மக்கள் அழைக்கின்றனர். திறந்தவெளிக் கோயிலான இங்கு கோபுரமோ, சுற்றுச்சுவரோ கிடையாது. போக்குவரத்து நெரிசல் கொண்ட சாலையின் நடுவே உள்ளது. அருகில் மெட்ரோ ரயில் நிலையமும் இருக்கிறது. ‘ப்ரா ப்ரோம்’ என இங்கு பிரம்மாவை அழைக்கின்றனர். ‘எரவான்’ என்பது பிரம்மாவின் வாகனமான மூன்று தலைகள் கொண்ட யானையைக் குறிக்கும். இக்கோயிலைத் தரிசித்தால் வாழ்வில் மகிழ்ச்சியும் தொழிலில் அதிர்ஷ்டமும் கிடைக்கும் என அந்நாட்டு வணிகர்கள் நம்புகின்றனர். . இக்கோயில் உருவான பின்னணி வித்தியாசமானது. 1956ல் அரசுக்குச் சொந்தமான எரவான் உணவகத்திற்கு கட்டிடப்பணி தொடங்கியது. ஆனால் பணியைத் தொடர முடியாமல் தடங்கல்கள் குறுக்கிட்டன. கட்டிட தொழிலாளர்கள் அவ்வப்போது விபத்திற்கு ஆளாகினர். கட்டுமானத்திற்காக கப்பலில் வரவழைக்கப்பட்ட சலவைக்கற்கள் மாயமாக மறைந்தன. இது குறித்து அரசாங்கத்தின் மீது விமர்சனக் கணைகள் நாலாபுறமும் எழும்பின. எப்படி சலவைக்கற்கள் மாயமானதற்கு விடை தெரியாமல் திணறிய அரசாங்கம் ஜோதிடர் ஒருவரின் உதவியை நாடியது. ‘அந்தக் காலத்தில் இந்த இடத்தில் தான் குற்றவாளிகளுக்கு பொதுமக்களின் முன்னிலையில் தண்டனை வழங்குவர். அந்த தீய சக்திகள் தான் கட்டிடப் பணியை தொடர முடியாமல் தடுக்கின்றன. படைப்புக்கடவுளான பிரம்மாவுக்கு கோயில் எழுப்பி வழிபட்டால் பிரச்னைக்கு தீர்வு கிடைக்கும்’’ எனத் தெரிவித்தார். அதனடிப்படையில் கோயில் உருவானது. அதன்பின் ஓட்டல் கட்டும் பணிகள் தடையின்றி முடிந்தது. பிரம்மா நான்கு முகம், ஆறு கைகளுடன் இருக்கிறார். தாயலாந்து மக்கள், சீனர்கள், இந்தியர்கள் என அனைவரும் வழிபடுகின்றனர். இங்குள்ள மண்டபத்தில் கண்கவர் வண்ண உடைகளுடன் நடனக்குழுவினர் நடனமாடுகின்றனர். நேர்த்திக்கடனுக்காக இந்த நடனம் நடத்தப்படுகிறது என்பது வியப்பளிக்கும் செய்தி. பிரம்மாவின் அருளால் விருப்பம் நிறைவேறப் பெற்றவர்கள் பணத்தை காணிக்கையாகச் செலுத்தினால் நிகழ்ச்சி நடத்தப்படுகிறது. ஊதுவத்தி, மெழுகுவர்த்தி, மல்லிகைப்பூ, மலர் மாலைகள் என பக்தர்கள் காணிக்கை செலுத்துகின்றனர். பிரம்மாவின் ஒவ்வொரு முகத்துக்கு எதிரிலும் காணிக்கைகளை வைத்து வழிபடுகின்றனர். பிரம்மாவின் ஒவ்வொரு முகமும் ஒவ்வொருவித அருளாசியை அளித்து நம்மை காப்பதாகச் சொல்கின்றனர். எப்படி செல்வது? எரவான் ஆலயம், ரட்சதாம்ரி சாலை, லும்பினி, பாங்காக், தாய்லாந்து தொடர்புக்கு: +66 2252 8750