மதுரையிலிருந்து அருப்புக்கோட்டை செல்லும் வழியில், 20 கிலோமீட்டர் தொலைவிலுள்ளது வளயகுளம் என்னும் தலம். இங்குள்ள ஆலயத்தில் ஈசன் சுயம்பு லிங்கமாக அருள்புரிகிறார். பொதுவாக பக்தர்கள் வேண்டிக்கொள்ளும்போது, காணிக்கையாகப் பணமோ பொருளோ தருவதாக வேண்டிக் கொள்வர். ஆனால் இங்கு மாசி மாத மகா சிவராத்திரியன்று நாடகம் நடத்துவதாக வேண்டிக் கொள்கின்றனர். பக்தர்கள் பதிவு செய்துகொள்ளும் வரிசைப்படி, சிவராத்திரி இரவு தொடங்கி 20 இரவுகள் நாடகம் நடத்துவர். எப்போதும் முதல் நாள் நாடகம் வீர அபிமன்யூ தான்! குழந்தைப் பேறில்லாதோர், நோயால் அவதிப்படுவோர், இன்னும் இதுபோன்ற நீண்ட நாள் பிரச்சினையுள்ளோர் இங்கு வந்து வேண்டிக்கொண்டு, வேண்டுதல் நிறைவேறியதும் அடுத்த ஆண்டு நாடகம் நடத்துகின்றனர். வேண்டுதல் நிச்சயம் நிறைவேறுகிறது என்பது இங்கு வரும் பக்தர்களின் அனுபவம்.