வடமதுரை: வடமதுரை மாரியம்மன் கோயில் மாசித்திருவிழாவில் இன்றிரவு நேர்த்திக் கடனுக்காக பக்தர்கள் பூக்குழி இறங்கும் நிகழ்ச்சி நடக்கிறது.கடந்த மார்ச் 13ல் பூத்தமலர் பூச்சொரிதலுடன் திருவிழா துவங்கியது. நாள்தோறும் மண்டகப்படிதாரர் கலை நிகழ்ச்சிகளுடன், அலங்கார ரதத்தில் அம்மன் வீதியுலா நடக்கிறது. மார்ச் 21ல் அம்மன் சாட்டுதல் நடந்தது. மார்ச் 23 முதல் நேற்றிரவு வரை அம்மன் ஊர் விளையாடல் நிகழ்ச்சி நடந்தது. முக்கிய நிகழ்ச்சியாக இன்றிரவு 7:00 மணிக்கு நுாற்றுக்கணக்கான பக்தர்கள் பூக்குழியில் இறங்கி நேர்த்திக்கடன் செலுத்த உள்ளனர். வழக்கமாக இந்த நிகழ்ச்சி இரவு 11:00 மணிக்கு மேல் நடக்கும். ஆனால் கொரோனா பிரச்னையால் இந்தாண்டு முன்னதாக நடத்த திட்டமிட்டுள்ளனர். பக்தர்கள் முகக்கவசம், சமூக இடைவெளி பின்பற்ற வேண்டும் என கோயில் தக்கார் சுகன்யா தெரிவித்துள்ளார். நாளை அக்னிச்சட்டி, மாவிளக்கு எடுத்தல், பொங்கல் வைத்தல் உள்ளிட்ட வழிபாடுகளும், மார்ச் 30ல் முளைப்பாரி எடுத்தல், மஞ்சள் நீராடுதலுடன் திருவிழா நிறைவடைகிறது.