சபரிமலையில் பங்குனி உத்திர ஆராட்டு திருவிழா நிறைவு
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
29மார் 2021 09:03
சபரிமலை: சபரிமலையில் 10 நாட்கள் நடைபெற்ற பங்குனி உத்திர ஆராட்டு திருவிழா நேற்று இரவு நிறைவு பெற்றது.பங்குனி மாத பூஜை மற்றும் உத்திர ஆராட்டு திருவிழாவுக்காக கடந்த 14ம் தேதி நடை திறந்தது.
பங்குனியில் நடைபெறும் உத்திர 10 நாள் ஆராட்டு திருவிழா 19ம் தேதி கொடியேற்றத்துடன் துவங்கியது.விழாவில் தினமும் ஸ்ரீபூதபலி, உற்சவபலி நடைபெற்றது. நேற்று முன்தினம் இரவு சரங்குத்தியில் பள்ளி வேட்டை நடைபெற்றது. நேற்று காலை உஷபூஜைக்கு பின்னர் யானை மீது சுவாமி விக்ரகத்துடன் ஆராட்டு பவனி பம்பைக்கு புறப்பட்டது. மதியம் பம்பையில் ஆராட்டு நடைபெற்றது. ஆராட்டு கடவில் சுவாமி விக்ரகத்துக்கு மஞ்சள், குங்குமம், சந்தனம், பன்னீர், தேன், பஞ்சாமிர்தம் என பல்வகை அபிேஷகம் நடைபெற்றது. பின்னர் தந்திரி கண்டரரு ராஜீவரரு, மேல்சாந்தி சுதிர்நம்பூதிரி ஆகியோர் சுவாமி விக்ரகத்துடன் தண்ணீரில் மூழ்கி எழுந்தனர்.மாலை 3:00 மணிக்கு திரும்ப புறப்பட்ட பவனி இரவு சன்னிதானம் வந்ததும் திருக்கொடி இறக்கப்பட்டு விழா நிறைவுபெற நடை அடைக்கப்பட்டது. இனி சித்திரை விஷூ பூஜைக்காக ஏப்.,10 மாலை 5:00 மணிக்கு நடை திறக்கும்.