பரமக்குடி : பரமக்குடி முத்தாலம்மன் கோயில் பங்குனிவிழாவில் நேற்று அதிகாலை அழகர் திருக்கோலத்துடன் அம்மன் வைகை ஆற்றில் எழுந்தருளினார்.
இக்கோயிலில் பங்குனி விழா மார்ச் 20 கொடியேற்றத்துடன் துவங்கியது. தினமும் பல்வேறு வாகனங்களில் வீதி வலம் வந்த அம்மன் நேற்று முன்தினம் இரவு மின் தீப தேரில் நான்கு மாட வீதிகளில் வலம் வந்தார்.தொடர்ந்து நேற்று 4:30 மணிக்கு அம்மன் கள்ளர் திருக்கோலத்துடன் பூப்பல்லக்கில் வைகை ஆற்றில் காட்சியளித்தார். அப்போது வானவேடிக்கைகள் முழங்க சக்தி மற்றும் கோவிந்தா கோஷம் முழங்க பக்தர்கள்அம்மனை தரிசித்தனர். தொடர்ந்து நேற்று காலை தீர்த்தவாரி உற்ஸவமும் இரவு வெள்ளி ரிஷப வாகனத்தில் அம்மன் வீதி வலம் வந்தார்.இன்று காலை 4:00 மணி துவங்கி ஆயிரக்கணக்கான பக்தர்கள் பால்குடம் எடுத்து தங்கள் நேர்த்திக்கடனை செலுத்த உள்ளனர்.