பதிவு செய்த நாள்
30
மார்
2021
10:03
திருப்பதி : கொரோனா தொற்றின் இரண்டாவது அலை பரவி வருவதை அடுத்து, திருமலைக்கு வரும் பக்தர்களுக்கு, புதிய விதிமுறைகளை, தேவஸ்தான நிர்வாகம் அறிவித்துள்ளது. ஆந்திர மாநிலத்தில் கொரோனா தொற்றின் இரண்டாவது அலை வேகமாக பரவி வருகிறது. கடந்த மூன்று நாட்களுக்கு முன்னதாக குறைவாக இருந்த பாதிப்பு, திடீரென அதிகரித்துள்ளது. பள்ளி, கல்லுாரிகளிலும் மாணவர்களுக்கு. தொற்றுகள் கண்டறியப்பட்டு வருகிறது. இதையடுத்து, முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக, திருமலை திருப்பதி தேவஸ்தானம் திருமலைக்கு வரும் பக்தர்களுக்கு, புதிய விதிமுறைகளை நேற்று முதல் அமல்படுத்தியது. தரிசன டிக்கெட் பெற்று, நடைபாதை மார்க்கத்தில் திருமலைக்கு வர விரும்புபவர்கள், 24 மணிநேரத்திற்கு முன்பே செல்ல அனுமதிக்கப்படுவர்.
அடுத்த நாளுக்கான தரிசன டிக்கெட் வைத்திருக்கும் பக்தர்கள், மதியம், 1:00 மணிக்கு மேல் மட்டுமே வாகனங்கள் வாயிலாக திருமலைக்கு செல்ல அனுமதிக்கப்படுவர்.ஆனால், இதுகுறித்து முன்னறிவிப்பு இல்லாததால், பக்தர்கள் பலர், வழக்கம் போல், நேற்று காலை, திருமலைக்கு செல்ல அலிபிரி சோதனைச் சாவடியில் குவிந்தனர். அவர்களுக்கு அனுமதி மறுக்கப்பட்டது.
செவ்வாய் கிழமைக்கான - இன்று - தரிசன டிக்கெட் வைத்திருப்பவர்களுக்கு, மதியம், 1:00 மணிக்கு மேல் மட்டுமே, செல்வதற்கு அனுமதி அளிக்கப்படும் என, அதிகாரிகள் தெரிவித்தனர். இதனால், சோதனைச் சாவடியில் வாகனங்கள் வரிசையில் நின்றதால், போக்குவரத்து பாதிக்கப்பட்டது. அதை கட்டுப்படுத்த முடியாமல் அதிகாரிகள் திணறினர்.கொரோனா கட்டுப்பாட்டிற்காக, தேவஸ்தானம் அமல்படுத்தும் புதிய விதிமுறைகளால் பக்தர்கள் வெகுவாக பாதிக்கப்பட்டுள்ளனர். இரண்டு நாட்களுக்கு முன்பே, புதிய விதிமுறைகள் அமல்படுத்த உள்ளதாக தெரிவித்து இருந்தால், அதற்கேற்றார் போல், பக்தர்கள் தங்கள் நேரத்தை மாற்றி அமைத்து கொள்ள வசதியாக இருந்திருக்கும்.