ஆனைமலை: ஆனைமலையில் பிரசித்தி பெற்ற தர்மராஜா திரவுபதியம்மன் கோவிலில், குண்டம் திருவிழா கடந்த, 12ம் தேதி கொடியேற்ற நிகழ்வுடன் துவங்கியது. தொடர்ந்து அம்மன் திருக்கல்யாணம், ஆபரணம் பூணுதல், ஊர்வலம் நடந்தது.
நேற்று முன்தினம் மாலை, 5:00 மணிக்கு அலங்கார திருத்தேர் வடம் பிடித்தல், இரவு, 10:00 மணிக்கு குண்டம் பூ வளர்த்தல் நடந்தது. நேற்று காலை, 8:00 மணிக்கு குண்டம் இறங்குதல் நிகழ்ச்சி நடந்தது. கோவில் திருப்பணிக்குழுவினர், அறநிலையத்துறை அதிகாரிகள் தலைமை வகித்தனர். விரதமிருந்த நுாற்றுக்கும் மேற்பட்ட பக்தர்கள் பாதுகாப்பான முறையில், குண்டம் இறங்கி அம்மனுக்கு நேர்த்திக்கடன் செலுத்தினர். குண்டம் நிகழ்வை கண்ட பக்தர்கள், கோவிந்தா... கோவிந்தா... என பக்திப் பரவசத்தில் கோஷமிட்டனர். ஆனைமலை போலீசார், ஊர்க்காவல் படையினர், தீயணைப்புத்துறையினர் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர். இன்று, 30ம் தேதி மாலை, 5:00 மணிக்கு திருத்தேர் நிலை நிறுத்தம், பட்டாபிஷேகம்; 31ம் தேதி இரவு போர் மன்னன் காவு நிகழ்ச்சி நடக்கிறது.