பதிவு செய்த நாள்
30
மார்
2021
01:03
உடுமலை: பத்ரகாளியம்மன் கோவில் திருவிழாவையொட்டி, நேற்று நடந்த அம்மன் திருக்கல்யாணத்தில், திரளான பக்தர்கள் பங்கேற்றனர்.
உடுமலை சங்கிலி வீதியில் அமைந்துள்ள பத்ரகாளியம்மன் கோவிலில், கடந்த,16ம் தேதி நோன்பு சாட்டுதல் நிகழ்ச்சியுடன், திருவிழா துவங்கியது. கொடியேற்றுதல், முளைப்பாலிகையிடுதல், கும்பம் எடுத்து வருதல் உட்பட பல்வேறு சிறப்பு நிகழ்ச்சிகள் நடந்தது. திருவிழாவின் முக்கிய நிகழ்வான அம்மன் திருக்கல்யாணம் நேற்று, கோவிலில், காலை 10:00 மணிக்கு நடந்தது. சூலத்தேவருடன், திருக்கல்யாண அலங்காரத்தில், அருள்பாலித்த, பத்ரகாளியம்மனை திரளான பக்தர்கள் பங்கேற்று தரிசனம் செய்தனர். தொடர்ந்து, சிறப்பு அபிேஷக, ஆராதனைகள் நடந்தது. பரிவட்டம் கட்டுதல் நிகழ்ச்சிக்கு பிறகு, அம்மன் திருவீதியுலா நடந்தது. இன்று, மாலை 6:00 மணிக்கு, கொடி இறக்குதல், கும்பம் விடுதல், முளைப்பாலிகை விடுதல் நிகழ்ச்சி நடக்கிறது. நாளை, மஞ்சள் நீராட்டு விழாவும், மகா அபிேஷகமும் நடக்கிறது.