பதிவு செய்த நாள்
01
ஏப்
2021
06:04
பெ.நா.பாளையம்: துடியலூர் அருகே உருமாண்டாம்பாளையம் ஸ்ரீ பண்ணாரி அம்மன் கோவிலில் பூக்குண்டம் திருவிழா நடந்தது. மேட்டுப்பாளையம் ரோடு, ஜி.என்.மில்ஸ் அருகே உள்ள உருமண்டம்பாளையம், ஜீவா வீதியில் பழமை வாய்ந்த ஸ்ரீ பண்ணாரி மாரியம்மன் கோவில் உள்ளது. இங்கு சாமி அழைத்து குண்டம் இறங்குதல், குண்டம் பற்றவைத்தல் ஆகிய நிகழ்ச்சிகள் நடந்தன. பங்குனி உத்திரம் விழாவையொட்டி, பம்பை உடுக்கை அடித்து சக்தி அழைத்தல், குண்டம் பூஜை நடந்தன. குண்டத்தை சுற்றி பக்தர்கள் நடனமாடி, சாமியை அழைத்தனர். மேலும், ஒரு மரத்து பறவைகள் குழு சார்பில் அம்மன் அழைத்தல் பாட்டு நிகழ்ச்சி நடந்தது. தொடர்ந்து, அம்மனுக்கு சிறப்பு அலங்காரம் செய்யப்பட்டு, வளையல், மஞ்சள் கயிறு, வெற்றிலை, பாக்கு, மஞ்சள், குங்குமம் பழவகைகள் வைத்து பூஜைகள் நடந்தன. தொடர்ந்து, கண்ணாடி பார்த்து நிலா சாமி கும்பிடுதல் நடந்தது. விழாவையொட்டி, பக்தர்கள் கொண்டு வந்த பூக்கள் குண்டம் முழுவதும் வைத்து, பூப்பந்து உருட்டி, எலுமிச்சம்பழம் வைத்து, சாமி வரம் கேட்கும் நிகழ்ச்சியும் நடந்தது. அன்னதானம் நடந்தது. விழாவில், ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டனர். ஏற்பாடுகளை பண்ணாரி மாரியம்மன் கோவில் பவுர்ணமி குழுவினர் செய்திருந்தனர்.