பரந்து விரிந்த உலகத்தோடு ஒப்பிடுகையில் நாம் மிக சிறியவர்கள். நம்மால் எவரெஸ்ட் சிகரத்தை அளக்க முடியுமா? முதலும், முடிவும் இல்லாத கடவுளை நம்மால் ஆராய முடியுமா? முன்னோர் சொல்லும் தத்துவங்களை அப்படியே ஏற்பதே அறிவுடைமை! களிமண்ணை வைத்துக் கொண்டே உலகின் எந்த மூலைக்கும் தொடர்பு கொள்ளும் சிலிக்கான் புரட்சியை செய்து விட்டதாக அறிவியல் உலகம் மார்தட்டுகிறது. ‘களிமண்’ என் படைப்பு. உன்னால் ஒரு மண் துகளை உருவாக்கி விட முடியுமா? என கடவுள் கேட்டால் நம்மிடம் என்ன பதில் இருக்கிறது? இதில் இருந்து ஒரு விஷயம் தெளிவாகிறது. மனித மூளை எல்லாம் களிமண்! ஒருமுறை கடவுள் மறுப்பு இயக்கத்தினர் GOD IS NO WHERE – என்ற பதாகையோடு விவேகானந்தரை நோக்கி வந்தனர். ஆனால் விவேகானந்தரோ அதை படித்து விட்டு, அதில் GOD IS NOW HERE என உரக்கச் சொல்லி பதிலடி கொடுத்ததால் அங்கிருந்தவர்களால் அதனை மறுக்க முடியவில்லை. பக்தர்கள், ஞானிகள், பத்தினிகள் ஆகியோரை பழிக்கக் கூடாது. பழிப்பவர்களின் செல்வமும், வாழ்வும் காணாமல் போகும். ஆன்மிகவாதிகளை எதிர்க்கும் நாத்திகவாதிகள் வீழ்வது உறுதி. ‘‘துதிக்கும் அடியவர்க்கு ஒருவர் கெடுக்க இடர் நினைக்கின் அவர் குலத்தை முதல் அறக்களையும் எனக்கோர் துணையாகும்’’ என்கிறார் முருகபக்தரான அருணகிரிநாதர். முருக பக்தர்களுக்கு தீமை நினைக்கக் கூடாது. மீறினால் அவர்களின் குலத்தையே முருகனின் வேல் அழிக்கும். ‘யார் யார் நரகம் செல்வார்கள்’ என்னும் பட்டியலில் ‘நல்லவர்களின் மனதை நடுங்கச் செய்தவனுக்கு முதலிடம் என்கிறார் வள்ளலார். பக்தியும் ஒழுக்கமும் கொண்டவர்களின் மனம் நடுங்கச் செய்பவன் நரகக்குழியில் விழுவான். உலகம் தோன்றிய காலத்தில் இருந்தே வழிபாடு இருக்கிறது. கடவுளைக் கிண்டல் செய்பவர்களை ‘பேய்க்கூட்டம்’ என்கிறார் திருவள்ளுவர். உலகத்தார் ‘உண்டு என்பது’ இல்லென்பான் வையத்து அலகையாய் வைக்கப் படும் திருக்குறளின் முதலாவது அதிகாரமே ‘கடவுள் வாழ்த்து’ தான்! இதை நீக்கும் அதிகாரம் யாருக்கு இருக்கிறது? 84 லட்சம் உயிர் வகைகள் மண்ணுலகில் வாழ்கின்றன. இதில் ஆறறிவு உள்ள மனிதர்களாக பிறந்ததே கடவுளின் கருணையால் தான்! அதை உணராதவர்கள் தான் கடவுளை மறுப்பார்கள். திருந்தாத ஜன்மங்கள் இருந்தென்ன லாபம்? வருந்தாத உள்ளங்கள் பிறந்தென்ன லாபம்? ‘கடவுளை நம்பினோர் கைவிடப்படார்’ என்னும் பழமொழி ஒன்றுண்டு. அதன் பொருள் என்ன? கடவுளை நம்பாதவன் கைவிடப்படுவான் என்பது தானே! கந்தசஷ்டிக் கவச நாயகனாம் முருகப்பெருமானை எப்போதும் நினைப்போம்! அவரைக் கேலி செய்பவர்களுக்கும், திட்டுபவர்களுக்கும் சரியான பாடம் கிடைக்கும்.