சுதந்திரப் போராட்ட வீரரான பால கங்காதர திலகர் சிறையில் அடைக்கப்பட்ட அன்று அவரது வாழ்வில் சோகம் ஒன்று நிகழ்ந்தது. அவர் தண்டிக்கப்பட்டதை கேள்விப்பட்ட அவரது மனைவி சத்தியபாமா அதிர்ச்சியில் காலமானார். ஈமச் சடங்கில் பங்கேற்க அன்றைய ஆங்கில அரசு அனுமதிக்கவில்லை. தன் மூன்று பெண் குழந்தைகளைப் பராமரிக்குமாறு நண்பர்களுக்கு சிறையில் இருந்தே கடிதம் எழுதினார். அவர்களை நண்பர்கள், உறவினர்கள் வளர்த்தனர். திலகர் விடுதலையாகி வெளியே வந்தார். அவருக்கு எப்போதும் குடும்பப் பற்றை விட நாட்டுப் பற்றும், ஆன்மிகப் பற்றும் அவருக்கு அதிகம். ஒவ்வொரு இந்தியரையும் தன் குடும்பத்தினராகக் கருதினார். சுதந்திரம் பெற வேண்டும் என்ற வேட்கை மட்டுமே அவர் மனதில் கொழுந்து விட்டு எரிந்தது. ஒருமுறை ரயில் பயணத்தின் போது விவேகானந்தரைச் சந்தித்தார். அவரது பேச்சும் தோற்றமும் மனதைக் கவரவே, தன் வீட்டில் பத்து நாள் தங்குமாறு வேண்ட அவரும் தங்கினார். விவேகானந்தர் தங்கிய அறையை புனிதமாக கருதினார் திலகர். விவேகானந்தர் வழிகாட்டியபடி ஆன்மிக ரீதியாக இந்தியர்களை ஒருங்கிணைத்தால் தான், சுதந்திரம் பெற முடியும் என நம்பினார். மொழியால் வேறுபட்டிருந்தாலும் நம்மை இணைப்பது ஹிந்து மதமே. அதற்கு உதாரணமாக வடக்கே உள்ளவர்கள் ராமேஸ்வரத்திற்கும், தெற்கே உள்ளவர்கள் காசிக்கும் புனிதப்பயணம் செல்கின்றனர். ராமாயணமும், மகாபாரதமும் எல்லா இந்திய மொழிகளிலும் இருக்கின்றன. இந்தியர்களின் ஆழ்மனதில் ஆன்மிகம் வேரூன்றியிருப்பதால் நாத்திகச் சிந்தனைகள் மிகவும் குறைவு. ஏதேனும் ஒரு தெய்வ வடிவத்தின் மூலம் இந்தியர்களிடம் ஒற்றுமையை உண்டாக்க விரும்பிய அவரது மனதில் விநாயகர் தோன்றினார். ஹிந்துக்கள் ஒரு செயலைத் தொடங்கும் போதும், ஒரு விஷயத்தை எழுதும் போதும் பிள்ளையார் சுழியிட்டுத்தான் தொடங்குவர். அந்நிய மன்னர்களின் ஆட்சிக் காலத்தில் கூட, பலவித எதிர்ப்புக்கும் இடையே ஹிந்து மக்கள் ஒற்றுமையுடன் விநாயகர் சதுர்த்தி விழாவை கொண்டாடி வந்துள்ளனர். ஆங்கிலேய ஆட்சியை அகற்றி மக்களாட்சி மலர வேண்டும் என்றால் விநாயகர் சதுர்த்தியை இந்தியர்களின் விழாவாக மாற்றுவது ஒன்றே வழி என முடிவெடுத்தார் திலகர். அதற்காக விநாயக சதுர்த்தி ஊர்வலத்தை தன் வீட்டில், விவேகானந்தர் தங்கிய அறையில் இருந்து தொடங்கினார். இந்தியாவில் நல்லாட்சி மலர பிள்ளையார் சுழிபோட்டவர் திலகர்தான். பிள்ளைக்கடவுள் என்பதால் தீயசக்திகள் அவரைச் சீண்டி விளையாடுகின்றன. ஆனால் மதம் கொண்ட யானையின் பலத்தை எதிரிகளால் தாங்க முடியாது. நொடிப்பொழுதில் துவம்சம் செய்து விடுவார் என்ற உண்மையை உணர்த்தும் காலம் நெருங்கி விட்டது. கோடிக்கணக்கான மதயானை போன்ற தொண்டர்கள் பணி செய்ய நாயகனாக விளங்கும் விநாயகர் நல்லவர்களின் வெற்றிக்கு எப்போதும் துணை நிற்கிறார். ..நல்லவரா... கெட்டவரா... சிலர் தங்களைத் தாங்களே நல்லவர் என்று புகழ்ந்து கொள்வார்கள். சிலர் தங்களிடம் கெட்ட குணங்கள் இருப்பதாக கருதிக் கொள்வர். இரண்டுமே சரியானதல்ல என்கிறார் நாயகம். மனைவி விரும்பிய பொருளை வாங்கி கொடுக்காவிட்டால் அவளைப் பொறுத்தவரை கணவன் கெட்டவனாகிறான். வாங்கிக் கொடுத்தாலோ வீண் செலவாளி என்ற அவப்பெயர் அவனுக்கு ஏற்படலாம். உங்களை நீங்களே நல்லவரா கெட்டவரா என்று பரிசோதித்து கொள்ள வழிகாட்டுகிறார் நாயகம். உனது குணத்தை பற்றி சொல்வதற்கு தகுதியுள்ள ஒரே நபர் உன் பக்கத்து வீட்டுக்காரன் மட்டும் தான். அவன் நல்லவன் என உன்னைப் புகழந்தால் உண்மையில் நீ நல்லவன். கெட்டவன் என சொன்னால் நீ கெட்டவன் தான். எனவே அண்டை வீட்டுக்காரனிடம் அன்பு காட்டுவது அவசியம்.