பதிவு செய்த நாள்
02
ஏப்
2021
10:04
மதுரை : மதுரை மீனாட்சி அம்மன் கோயிலில் நேற்று இரவு பிரதமர் மோடி 45 நிமிடங்கள் தரிசனம் செய்தார். கோயில் சிறப்புகள் கேட்டும், வருகை பதிவேட்டில் குறிப்பு எழுதியும் பரவசமடைந்தார். தேசிய ஜனநாயக கூட்டணி வேட்பாளர்களை ஆதரித்து மதுரையில் இன்று பிரதமர் மோடி பிரசாரம் செய்கிறார். இதற்காக நேற்றிரவு சிறப்பு விமானம் மூலம் மதுரை வந்தார். நேராக மீனாட்சி அம்மன் கோயிலுக்கு இரவு 8:35 மணிக்கு வேட்டி, சட்டையுடன் வந்தார். அவரை தக்கார் கருமுத்து கண்ணன், இணைகமிஷனர் செல்லத்துரை வரவேற்றனர். பூரணகும்ப மரியாதை செய்யப்பட்டது.
கோயிலுக்கு வெளியே அவரை பார்க்க காத்திருந்த மக்களை பார்த்து கை அசைத்துவிட்டு, கிழக்கு கோபுரம் அம்மன் சன்னதி வழியாக உள்ளே சென்றார். பொற்றாமரைக்குளம் அதன் பின்னணியில் தெற்கு கோபுரம் இருப்பதை கண்டு ரசித்தார். அவருக்கு தொடர்ந்து கருமுத்து கண்ணன் கோயில் சிறப்புகளை கூறி வந்தார். இரவு 8:52 மணிக்கு அம்மனை தரிசித்தார். அவரது பெயரில் அர்ச்சனை செய்யப்பட்டது. பின்னர் முக்குறுணி விநாயகர் சன்னதி வழியாக சுவாமி சன்னதிக்கு இரவு 9:05 மணிக்கு சென்றார். அங்கும் அர்ச்சனை செய்யப்பட்டது. கோயில் விழாக்கள் குறிப்பாக சித்திரை திருவிழாவின் சிறப்புகள் குறித்து பிரதமரிடம் கூற, ஆர்வமாக கேட்டுக்கொண்டார். பின்னர் மடப்பள்ளி அருகே அவருக்கு கோயில் சார்பில் சிறப்பு செய்யப்பட்டது. கோயில் வருகை பதிவேட்டில் தமிழகம், மதுரையின் சிறப்புகள் மற்றும் கோயிலின் முக்கியத்துவம் குறித்து குறிப்பு எழுதினார். இதைத்தொடர்ந்து பிரசாதமாக விபூதி தரப்பட்டது.
இரவு 9:17 மணிக்கு தரிசனம் முடிந்து வெளியே வந்து, பசுமலை கேட் வே ஓட்டலுக்கு ஓய்வு எடுக்க சென்றார். பிரதமர் வருகையையொட்டி இரவு 7:00 மணி முதல் கோயிலுக்குள் பக்தர்கள் அனுமதிக்கப்படவில்லை. கோயிலைச் சுற்றி கமிஷனர் பிரேம் ஆனந்த் சின்ஹா தலைமையில் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டிருந்தது. பிரதமர் வருகை குறித்து தக்கார் கருமுத்து கண்ணன் கூறுகையில், நேரு, இந்திரா பிரதமர்களாக இருந்தபோது கோயிலுக்கு ஒருமுறை வந்துள்ளனர். மோடி தற்போது வந்துள்ளார். ஏற்கனவே அவர் குஜராத் முதல்வராக இருந்தபோது வந்ததாக தெரிவித்தார். அவருக்கு கோயில் சிறப்புகள், விழாக்கள், கலை சிற்பங்களின் நுணுக்கங்கள் குறித்து விளக்கினோம். ஆர்வமாக கேட்டுக்கொண்டார். பாரம்பரிய முறைப்படி தரிசனம் செய்தார், என்றார்.