பதிவு செய்த நாள்
03
ஏப்
2021
01:04
நாகப்பட்டினம்:நாகை அடுத்த வேளாங்கண்ணி தேவாலயத்தில், நேற்று மாலை நடந்த புனித வெள்ளி இறைபாடு நிகழ்ச்சியில் பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் கலந்து கொண்டனர்.
நாகை அடுத்த வேளாங்கண்ணி ஆரோக்கியமாதா தேவாலயத்தில், இயேசு கிறிஸ்து, சிலுவையில் அறையப்பட்ட புனித வெள்ளி தினமான,நேற்று சிறப்பு திவ்ய நற்கருணை ஆராதனை நிகழ்ச்சிகள் நடந்தன. நேற்று அதிகாலை 5 மணி முதல் மாலை 5 மணி வரை திவ்ய நற்கருணை ஆராதனைகள் பல்வேறு தரப்பினரால் நடத்தப்பட்டது. அடைக்கல அன்னை அருட்சகோதரிகள்,இருதயம் மரியாயின் சேனை,அன்னை தெரசா சபை, ஆங்கில திருப்பயணிகள்,நிர்மல் இல்லத்தினர்,டி.எம்.ஐ.,சகோதரிகள் மற்றும் பல்வேறு அமைப்பினர் தொடர்ந்து 12 மணி நேரம் திவ்ய நற்கருணை ஆராதனை நடத்தினர்.தொடர்ந்து தேவாலய கலையரங்கில் மாலை பேராலய அதிபர் பிரபாகர் உள்ளிட்ட 10 க்கும் மேற்பட்ட பாதிரியார்கள் தலைமையில் இறைவழிபாடு,பொது மன்றாட்டு,சிலுவை ஆராதனை நடந்தது.சிறப்பு திருப்பலியில் நாட்டின் பல்வேறு பகுதிகளில் இருந்து வந்திருந்த ஏராளமான பக்தர்கள் பங்கேற்றனர்.இருப்பினும் முக்கிய நிகழ்வாக நடைபெறும் இயேசு கிறிஸ்துவின் சொரூபத்தை பக்தர்கள் முத்தமிடுதல் தவிர்க்கப்பட்டு வணங்குவதற்கு மட்டுமே அனுமதிக்கப்பட்டது.