பதிவு செய்த நாள்
03
ஏப்
2021
03:04
திருமலை திருப்பதி ஏழுமலையான் கோவிலில், பக்தர்கள் காணிக்கையாக அளிக்கும் தலைமுடி, சட்டவிரோதமாக வெளிநாட்டுக்கு கடத்தப்படுவதாக புகார் எழுந்து உள்ளது.
ஆந்திராவில், முதல்வர் ஜெகன்மோகன் ரெட்டி தலைமையில், ஒய்.எஸ்.ஆர்.காங்கிரஸ் ஆட்சி நடக்கிறது.இங்குள்ள திருப்பதியில், நாட்டின் பணக்காரக் கோவிலாகக் கருதப்படும் திருமலை ஏழுமலையான் கோவில் உள்ளது. இந்த கோவிலை, திருமலை திருப்பதி தேவஸ்தான அறக்கட்டளை நிர்வகித்து வருகிறது.இங்கு, பக்தர்கள் மொட்டை போட்டு காணிக்கையாக அளிக்கும் தலைமுடி, மூன்று மாதங்களுக்கு ஒரு முறை, ஆன்லைன் வாயிலாக ஏலம் விடப்படுகிறது. ரூபாய் 125 கோடிஇதன் வாயிலாக, கடந்த ஆண்டு மட்டும், கோவில் நிர்வாகத்துக்கு, 125 கோடி ரூபாய் வருவாய் கிடைத்ததாக அறக்கட்டளை தெரிவித்துள்ளது.
இந்நிலையில், கடந்த பிப்., 7ம் தேதி, வடகிழக்கு மாநிலமான மிசோரமின் சங்டே என்ற இடத்தில், சந்தேகத்துக்கு இடமான வாகனங்களை, அசாம் ரைபிள்ஸ் படையினர் தடுத்து நிறுத்தி சோதனையிட்டனர்.அந்த வாகனங்களில், 120 பைகளில் தலைமுடி இருந்தது தெரிய வந்தது. விசாரணையில், அவை, திருப்பதி கோவிலில் இருந்து எடுத்து வரப்படுவதாக, அதில் இருந்த நபர்கள் தெரிவித்ததாக கூறப்படுகிறது.இந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இதில் மிகப்பெரிய ஊழல் நடப்பதாகவும், இது தொடர்பாக, கோவில் நிர்வாகம் மற்றும் மாநில அரசு முறையான விளக்கம் அளிக்க வேண்டும் என்றும், எதிர்க்கட்சிகளான தெலுங்கு தேசம் மற்றும் பா.ஜ., கோரியுள்ளது.
திருப்பதி கோவிலில் இருந்து சட்டவிரோதமாக கடத்தப்படும் தலைமுடி, தென்கிழக்கு ஆசிய நாடான மியான்மர், தாய்லாந்து வழியாக, சீனாவுக்கு கடத்தப்பட்டு, விக் தயாரிக்க பயன்படுத்தப்படுவதாக புகார் எழுந்துள்ளது.இந்த கடத்தலுக்கு, தேவஸ்தான அறக்கட்டளை அதிகாரிகள் உடந்தையாக உள்ளனர். மிசோரமில் கைப்பற்றப்பட்ட தலைமுடியின் மதிப்பு, 2 கோடி ரூபாய் இருக்கும் என, எதிர்க்கட்சிகள் குற்றஞ்சாட்டியுள்ளன.இது குறித்து விளக்கம் அளித்த, திருமலை திருப்பதி தேவஸ்தானத்தின் சிறப்பு அதிகாரி தர்மா ரெட்டி கூறியதாவது:மிசோரமில் கைப்பற்றப்பட்ட தலைமுடியின் மதிப்பு, 18 லட்சம் ரூபாய் இருக்கும். மேலும், அந்த தலைமுடிகள் தரம் பிரிக்கப்படாதவையாக உள்ளன.தி
திருமலை கோவில் அறக்கட்டளையை பொறுத்தவரை, தலைமுடியின் நீளம், நிறம் ஆகியவற்றின் அடிப்படையில் முதல் தரம், இரண்டாம் தரம் என, தரம் பிரிக்கப்பட்ட பிறகே ஏலம் விடப்படும்.பொய்யான தகவல்திருமலை கோவிலில் பலத்த பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. இங்கிருந்து அவ்வளவு எளிதாக தலைமுடியை யாரும் கடத்திச் செல்ல முடியாது. வீண் விளம்பரங்களுக்காகவே, சமூக வலைதளங்களில் பொய்யான தகவல் பரப்பப்படுகிறது. இவ்வாறு அவர் கூறினார். இந்த விவகாரம் தொடர்பாக, திருப்பதி கிழக்கு காவல் நிலையத்தில், தேவஸ்தானம் சார்பில் புகார் அளிக்கப்பட்டுள்ளது. தெலுங்கு ஊடக நிறுவனம் உட்பட, ஆறு பேர் மீது போலீசார் வழக்குப் பதிவு செய்துள்ளனர். இந்த விவகாரம் தொடர்பாக, வெள்ளை அறிக்கை தாக்கல் செய்யும்படி, பா.ஜ., தேசிய செயலர் சுனில் தியோரா தெரிவித்து உள்ளார். திருப்பதி லோக்சபா தொகுதிக்கு, இம்மாதம், 17ல் இடைத்தேர்தல் நடக்கவுள்ளதை அடுத்து, இந்த தலைமுடி கடத்தல் விவகாரம், பிரசாரத்தில் முக்கிய இடம் பிடித்துள்ளது. - நமது நிருபர் -