மானாமதுரை : மானாமதுரை அருகே எஸ்.கரிசல்குளத்தில் அமைந்துள்ள கேட்டவரம் தரும் முத்துமாரியம்மன் கோயிலில் நடைபெற்ற பங்குனி பொங்கல் விழாவில் ஏராளமான பக்தர்கள் வேண்டுதல்களை நிறைவேற்றி சாமி தரிசனம் செய்தனர்.
இக்கோயிலில் பங்குனித் திருவிழா கடந்த மாதம் 28 ந் தேதி காப்புக்கட்டுதலுடன் துவங்கியது. தினந்தோறும் மண்டகப்படிதார்கள் சார்பில் முத்துமாரியம்மனுக்கும் கோயில் பரிவார தெய்வங்களுக்கும் அலங்காரம் செய்து சிறப்பு பூஜைகள் நடைபெற்றன.விழாவின் முக்கிய நிகழ்ச்சியான பொங்கல் விழா நேற்று முன்தினம் இரவு நடைபெற்ற போது ஏராளமான பக்தர்கள் தீச்சட்டி,பால்குடம் எடுத்து வந்து பூக்குழி இறங்கினர்.மேலும் பலர் மாவிளக்கு பூஜை, பொங்கல் வைத்து படைத்தும் நேர்த்திக்கடனை செலுத்தினர்.கோயில் முன் அன்னதானம் நடந்தது. ஏற்பாடுகளை கோயில் டிரஸ்டிகள் லெட்சுமணன் ராக்கு, பாண்டி,போதும்பொண்ணு செய்திருந்தனர்.விழாவில் மானாமதுரை மற்றும் சுற்றுவட்டார கிராமங்களைச் சேர்ந்த பக்தர்கள் கலந்து கொண்டனர்.