பதிவு செய்த நாள்
08
ஜூன்
2012
11:06
திருச்சி: சுந்தர்ராஜ் நகர் சுந்தர விநாயகர், கல்யாண ராமர் கோவில் கோபர கலசத்துக்கு புனித நீரூற்றி கோலாகலமாக நேற்று கும்பாபிஷேகம் நடந்தது. திருச்சி, சுந்தர்ராஜ் நகரில் ஸ்ரீசுந்தர விநாயகர், ஸ்ரீகல்யாண ராமர் கோவில் உள்ளது. இந்த கோவிலில் சுந்தர விநாயகர், கல்யாண ராமர் பரிவார தேவதைகளுடன் எழுந்தருளி அருள் பாலிக்கின்றனர். இக்கோவிலின் மஹா கும்பாபிஷேகம் நேற்று காலை நடந்தது. இதை முன்னிட்டு கடந்த 4ம் தேதி முதல் பல்வேறு பூஜைகள் நடந்தது. நேற்று காலை 7.35 மணிக்கு கோபூஜை உள்ளிட்ட அனைத்து பூஜைகளும், தீபாராதனைகளும் முடிந்த பின், சுந்தர விநாயகர், கல்யாண ராமருக்கு மஹாகும்பாபிஷேகம், மூலஸ்தான கும்பாபிஷேகமும் நடந்தது. வெள்ளலூர் நாடு கணேசகுருக்கள், திருவள்ளறை கோவில் ரமேஷ்பட்டர் ஆகியோர் சர்வசாதகம் செய்தனர். கோபுர கலசங்களுக்கு புனிநீர் ஊற்றப்பட்டது. ஸ்தபதி சந்திரமோகன், இறைப்பணி மன்ற முன்னாள தலைவர் சத்யவாகீஸ்வரன், இறைப்பணி மன்றம் தலைவர் சிதார் வெஸல்ஸ் திருநாவுக்கரசு, செயலாளர் பக்கிரிசாமி, உபதலைவர் சுப்பிரமணியன், இணை செயலாளர் கோபாலகிருஷ்ணன், பொருளாளர் தொழிலதிபர் மனோகரன் உள்ளிட்டோருக்கு மரியாதை செய்யப்பட்டது. அனைவருக்கும் அன்னதானம் வழங்கப்பட்டது. கும்பாபிஷேகத்தை முன்னிட்டு, போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டிருந்தது. கமிஷனர், மாவட்ட போலீஸ் அலுவலகம் எதிரே கோவில் அமைந்துள்ளதால் போலீஸ் அதிகாரிகள் பலரும் கோவிலுக்கு வந்து வழிபட்டு சென்றனர். ஆயிரக்கணகான மக்கள் கும்பாபிஷேகத்தில் பங்கேற்றனர்.