பதிவு செய்த நாள்
15
ஏப்
2021
05:04
கோவை : கோவை சுற்றுப்பகுதியிலுள்ள கோவில்களில், தமிழ் புத்தாண்டை வரவேற்கும் விதமாக, சிறப்பு பூஜைகள் நடந்தன. பக்தர்கள் சமூக இடைவெளி பின்பற்றி வழிபட்டனர்.
தமிழ்ப்புத்தாண்டான ஸ்ரீ பிலவ ஆண்டு பிறப்பு, சித்திரை கனி விழாவாக கொண்டாடப்பட்டது. இதற்காக, கோவில்களில் சுவாமிகளுக்கு அபிஷேகம், அலங்காரம் செய்து, சிறப்பு பூஜை நடத்தப்பட்டது.கோனியம்மன் கோவில், தண்டுமாரியம்மன் கோவில், ரேஸ்கோர்ஸ் சாரதாம்பாள் கோவில், ராம்நகர் கோதண்டராமர், ஆர்.எஸ்.புரம் காமாட்சியம்மன், உக்கடம் லட்சுமி நரசிம்மர், பெரியகடைவீதி லட்சுமிநாராயண வேணுகோபால சுவாமி, சலிவன்வீதி வேணுகோபாலசுவாமி, அன்னபூர்னேஸ்வரி கோவிலில், நேற்று புத்தாண்டு சிறப்பு பூஜைகள் நடந்தன. பக்தர்கள், குடும்பம் சகிதமாக வழிபட்டனர். கூட்டம் அதிகமாக இருந்ததால், முகக்கவசம் கட்டாயம் அணிய வேண்டும், சமூக இடைவெளியை பின்பற்ற வேண்டும், என, கோவில் நிர்வாகம் சார்பில் வலியுறுத்தப்பட்டது. உடல் வெப்பநிலை பரிசோதனை செய்த பின்பே, பக்தர்கள் அனுமதிக்கப்பட்டனர்.