பதிவு செய்த நாள்
15
ஏப்
2021
06:04
திருத்தணி : கோடை வெயில் கொளுத்துவதால் பக்தர்களின் வசதிக்காக, முருகன்மலைக் கோவிலில், வெள்ளை வண்ணம் தீட்டி, தரை விரிப்பு போடப்பட்டுள்ளது.
திருத்தணி முருகன் மலைக்கோவிலுக்கு, தமிழகம் உட்பட, அண்டை மாநிலங்களில் இருந்து, தினமும் ஆயிரக்கணக்கான பக்தர்கள் வந்து மூலவரை வழிபடுகின்றனர்.தற்போது, வெயில் கொளுத்துவதால், பக்தர்கள் மலைக்கோவில் மாடவீதியில் நடப்பதற்கு கடும் சிரமப்பட்டு வந்தனர்.குறிப்பாக, காலை, 9:00 மணி முதல், மாலை, 5:00 மணி வரை, மாடவீதியில் பக்தர்களின் கால்கள் சுடுவதால், குளிர்ச்சியாக இருக்க, கோவில் நிர்வாகம், மாடவீதியை சுற்றிலும், வெள்ளை வண்ணம் தீட்டியுள்ளது.
மேலும், தேங்காய் நாரிலான கால்விரிப்பும் அமைத்துள்ளனர்.திருத்தணியில் அதிகம் வெயில் கொளுத்துவதாலும், மலைக்கோவிலில் கடுமையான வெப்பம் உள்ளதாலும், கோவிலை சுற்றியும், மாடவீதியை சுற்றியும், ஒரு லட்சம் ரூபாய் மதிப்பில், குளிர்ச்சி தரும் வெள்ளை வண்ணம் அடிக்கப்பட்டும், 6 அடி அகலமும், 400 மீட்டர் நீளமுள்ள தரைவிரிப்பானும் அமைக்கப்பட்டுள்ளன.இந்த தரைவிரிப்பின் மேல், பக்தர்கள் நடந்து செல்வதால், வெயில் தாக்கம் குறையும். அக்னி நட்சத்திரம் துவங்க உள்ளதால், பக்தர்களுக்கு நீர், மோர் இலவசமாக விரைவில் வழங்கப்பட உள்ளன என, கோவில் நிர்வாகம் தரப்பில் கூறப்பட்டுள்ளது.