பதிவு செய்த நாள்
16
ஏப்
2021
10:04
பல்லடம்: மூலிகை மருத்துவத்தின் மூலமாக மட்டுமே, புதிய வைரஸ் கிருமியை அளிக்க முடியும் என, ஆற்காடு பஞ்சாங்கத்தில் கணித்து கூறப்பட்டுள்ளது.
கடந்த ஆண்டு மார்ச் மாதம் துவங்கிய கொரானாவின் கோர தாண்டவத்தால், உலகம் முழுவதும் பல லட்சம் மக்கள் இறந்துள்ளனர். கோடிக்கணக்கானோர் நோய் தொற்று காரணமாக பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர். இந்தியாவில் அதற்கான தடுப்பூசிகள் போடப்பட்டு வந்த போதும், நோய் தொற்று பரவல் மேலும் தீவிரமடைந்துள்ளது. இச்சூழலில், மூலிகை மருத்துவத்தின் மூலமாக மட்டுமே, புதிய வைரஸ் கிருமியை அழிக்க முடியுமென, புத்தாண்டில் வெளியான ஆற்காடு பஞ்சாங்கத்தில் கணித்து கூறப்பட்டுள்ளது. அதில், ஸ்ரீலட்சுமி நரசிம்மர் வருஷ தேவதையாக வருவதால், புதிய வைரஸ் கிருமிகளை அழிக்கும் மருந்துகளை இந்தியா தயாரிக்க நேரும். புதிய ரத்த புற்றுநோய் ஒன்று வட கிழக்கு திக்கில் இருந்து உற்பத்தியாகி உலக நாடுகளை கதிகலங்க வைக்கும். இந்த ஆண்டு வெயில் அளவுக்கு அதிகமாக இருக்கும். புதிய வைரஸ் தொற்றால் மீண்டும் உலகம் ஸ்தம்பிக்க நேரும். மக்கள் கடும் அவஸ்தைப்படுவார்கள். பண பற்றாக்குறை ஏற்பட்டு, கேரளா, தமிழகம் கடுமையாக பாதிக்கும். மூலிகை மருத்துவத்தின் மூலமாகத்தான் புதிய வைரஸ் கிருமியை அழிக்க முடியும். என்பது உள்ளிட்ட பல்வேறு பலன்கள் கணித்து வெளியிடப்பட்டுள்ளன.
ஆற்காடு சீதாராமய்யர் எழுதி, கடந்த ஆண்டு வெளியான பஞ்சாங்கத்தில், புதிய வைரஸ் கிருமியால் உலகம் முழுவதும் மக்கள் பாதிக்கப்படுவார்கள் என ஏற்கனவே கணித்து கூறப்பட்டிருந்தது. இதேபோல், 2020 - 21ம் ஆண்டுக்கான பஞ்சாங்கத்திலும், வைரஸ் தாக்கம் குறித்து கணிக்கப்பட்டுள்ளது. பஞ்சாங்கத்தில் கூறப்பட்டுள்ளது போல் வைரஸ் தாக்கம் அதிகரித்து வருவது குறிப்பிடத்தக்கது.