சாயல்குடி: சாயல்குடி அருகே மாரியூர் பூவேந்தியநாநர் சமேத பவளநிற வல்லியம்மன் கோவில் உள்ளது. ராமாயண இதிகாசத்துடன் தொடர்புடைய கற்சிற்பங்கள் இக்கோயிலில் இடம் பெற்றுள்ளது. வருண பகவானால் பூஜிக்கப்பட்ட ஸ்தலமாகவும், கடற்கரையையொட்டிய சிவன் கோயிலாக விளங்கி வருகிறது.
இக்கோயிலில் ஒவ்வொரு ஆண்டும் சித்ரா பவுர்ணமி அன்று வலைவீசும் புராண நிகழ்வு நடப்பது வழக்கமாகும். இந்த ஆண்டு ஏப்., 18ல் கொடியேற்றத்துடன் துவங்கும் விழா, ஏப்., 27 அன்று நடக்கவிருந்த வலைவீசும் படலம் நிகழ்வுகள் ரத்து செய்யப்பட்டுள்ளது. திருவிளையாடலில் 57 வது படலத்தில் சிவபெருமான் மீனவராக வேடமிட்டு கடலுக்குள் சென்று சுறா மீனை வதம் செய்து பார்வதிதேவியை மணந்ததாக கூறப்படுகிறது. அதனை நினைவூட்டும் விதமாக ஒவ்வொரு ஆண்டும் மாரியூர் கடற்கரையில் வலைவீசும் படலக்காட்சிகள் அரங்கேற்றப்பட்டு வருகின்றன. கொரோனா தடுப்பு முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக இந்நிகழ்வுகள் ரத்து செய்யப்பட்டுள்ளது. கோயிலில் உள்ள நடைமுறைப்படி வழக்கம்போல் பூஜைகள் பக்தர்களின்றி நடக்க உள்ளது.