பதிவு செய்த நாள்
17
ஏப்
2021
12:04
தஞ்சாவூர்: தஞ்சாவூர் பெரியகோவில் முழுவதும் நவீன விளக்குகள் பொருத்தப்பட்ட நிலையில், கோவில் தங்கம் போன்று இரவில் ஜொலிப்பது சுற்றுலா பயணிகளை கவர்ந்துள்ளது.
மாமன்னன் ராஜராஜசோழனால் கட்டப்பட்ட தஞ்சாவூர் பெரியகோவில், உலக பாரம்பரிய சின்னமாக போற்றப்படுகிறது. ஆயிரம் ஆண்டுகளுக்கு மேலாக தமிழர்களின் கட்டடக் கலைக்கு எடுத்துக்காட்டாக திகழ்கிறது. இக்கோவிலை பார்க்க நாள்தோறும் ஆயிரக்கணக்கான சுற்றுலா பயணிகள் வருகின்றனர். இந்நிலையில் பெரியகோவிலுக்கு வரும் பக்தர்களை கவரும் வகையில், மத்திய தொல்லியல் துறையினர் பல்வேறு பணிகளை மேற்கொண்டுள்ளனர்.
கடந்த ஆண்டு பிப்., 5ம் தேதி நடந்த கும்பாபிஷேகத்தின் போது, சினிமா மற்றும் பல்வேறு கலை விழாவுக்கு ஒளி விளக்குகள் அமைக்கும் குழுவினர், பெரியகோவில் கோபுரம், முக்கிய சாமி சன்னதிகள் ஆகிய பகுதிகளில், மிளிரும் வகையில் நவீன ஒளி விளக்குகளை அமைத்தனர்.இது சுற்றுலா பயணிகள், பக்தர்கள் என பலரையும் கவர்ந்தது.பின்னர், கும்பாபிஷேகம் முடிந்ததும் விளக்குகள் அகற்றப்பட்டது. அப்போது, பெரியகோவில் முழுவதும் கும்பாபிஷேகத்தின் போது அமைப்பட்ட நவீன ஒளி விளக்குகள் போல அமைக்கப்பட வேண்டும் என பலரும் கோரிக்கை விடுத்தனர்.
இதையடுத்து, மத்திய தொல்லியல்துறை, மாமல்லபுரத்தைப் போன்று, தஞ்சாவூர் பெரியகோவிலையும் இரவு நேரத்தில் மிளிர வைக்கும் வகையில் நவீன மின்னொளி விளக்குகள் பொருத்த நடவடிக்கை எடுத்தனர். இதற்கான அளவீடு செய்யும் பணி கடந்த ஜூலை மாதத்தில் தொடங்கியது. தொடர்ந்து, 216 அடி உயர கருவறை கோபுரம், பெரியநாயகி சன்னதி, விநாயகர் சன்னதி உள்ளிட்ட சன்னதிகள், ராஜராஜன் வாயில் கோபுரம், கேரளாந்தகன் வாயில் கோபுரம், மராட்டி வாயில், திருச்சுற்றுமாளிகை உள்ளிட்டவற்றில் நவீன மின் விளக்குகள் பொருத்தப்பட்டன. இந்த விளக்குகள் எரிய விடப்பட்டு சோதனை செய்யப்பட்டன.இந்நிலையில், மகா சிவராத்தி அன்று இரவு கோவில் முழுவதும் இந்த விளக்குகள் எரியவிடப்பட்டன.இதனால், கோவில் தங்கம் போன்று ஜொலித்தது. இதை பலரும் கண்டு களித்தனர். இதுகுறித்து இந்திய தொல்லியல் துறையின் அலுவலர்கள் கூறுகையில், தற்போது சோதனை அடிப்படையில் எரிய விடப்பட்டு வருகிறது. விரைவில் கோவில் நிர்வாகத்துடன் ஒப்பந்தம் செய்யப்பட்டு, தொடர்ந்து விளக்குகள் எரிய வைக்க நடவடிக்கை எடுக்கப்படும், என்றனர்.