திருநாகேஸ்வரம் நாகநாதசுவாமி கோவிலில் அமைச்சர் திடீர் ஆய்வு!
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
12ஜூன் 2012 10:06
கும்பகோணம்: திருநாகேஸ்வரம் நாகநாதசுவாமி கோவிலில் இந்துசமய அறநிலையத்துறை அமைச்சர் ஆனந்தன் திடீர் வருகை தந்து பணிகளை ஆய்வு செய்தார். கும்பகோணம் அருகே உள்ள திருநாகேஸ்வரத்தில் தமிழக நவக்கிரக தலங்களில் ஒன்றான ராகுதலம் நாகநாதசுவாமிகோவில் உள்ளது. இங்கு நேற்று தமிழக இந்துசமய அறநிலையத்துறை அமைச்சர் ஆனந்தன் திடீரென வருகை தந்தார். கோவில் சார்பாக பூரண கும்பமரியாதையுடன் சிறப்பு வரவேற்பு அளிக்கப்பட்டது. பின் நாகநாதபெருமான், பிறையணி அம்மன், ராகுபகவான் சன்னதிகளுக்கு சென்று சிறப்பு அர்ச்சனை செய்து வழிபட்டார். அங்கு பரிவட்டம் கட்டி மரியாதை செய்யப்பட்டது. அதன்பின் ஆலய நிர்வாகம் குறித்தும், பக்தர்களின் வசதிகள் குறித்தும் கேட்டறிந்தார். பின் நவக்கிரக கோவில்களுக்கு வந்து செல்லும் பக்தர்கள் தங்கி செல்வதற்கு வசதியாக நவீன வசதிகளுடன் தங்கும்விடுதிகள் கட்டப்பட உள்ள இடத்தினை பார்வையிட்டார். ஆலய வளர்ச்சி குறித்தும், பக்தர்கள் நலன்கள் குறித்தும் ஆலோசனை வழங்கினார். அமைச்சருடன் மயிலாடுதுறை இந்துசமய அறநிலையத்துறை இணை ஆணையர் சுவாமிநாதன், துணை ஆணையர் கஜேந்திரன், உதவி ஆணையர் மோகனசுந்தரம், ஒப்பிலியப்பன்கோவில் உதவி ஆணையர் பரணீதரன், உதவிகோட்டப்பொறியாளர் கல்யாணசுந்தரம், முன்னாள் எம்.எல்.ஏ., தவமணி, டவுன் பஞ்., தலைவர் சாமிநாதன், துணைத்தலைவர் சிங்காரவேலு உள்ளிட்ட பலர் உடனிருந்தனர்.