பதிவு செய்த நாள்
12
ஜூன்
2012
10:06
பெங்களூரு : நித்யானந்தா ஜாமினை ரத்து செய்து, அவரை கைது செய்ய வேண்டும்; பிடதி ஆசிரமத்திற்கு "சீல் வைக்க வேண்டும் என, நேற்று நடந்த உயர்மட்ட அவசரக் கூட்டத்தில் முடிவு எடுக்கப்பட்டுள்ளது, என, கர்நாடக முதல்வர் சதானந்த கவுடா கூறினார். நித்யானந்தா வழக்கில் சாட்சியாகச் சேர்க்கப்பட்டுள்ள ஆர்த்தி ராவ், கன்னட "டிவி சேனல் ஒன்றில் பேட்டியளித்தார். அதில், நித்யானந்தா தன்னை பாலியல் பலாத்காரம் செய்தார் என்று குறிப்பிட்டிருந்தார். அதற்கு பதில் அளிக்க நித்யானந்தா, கடந்த 7ம் தேதி, பிடதி ஆசிரமத்தில் நிருபர்கள் கூட்டம் நடத்தினார். அந்த கூட்டத்தில் கன்னட "டிவி நிருபர், நீதிமன்ற சம்மன் பற்றி கேள்வி எழுப்பினார்.அதனால் கோபமடைந்த நித்யானந்தா, நிருபரை வெளியேற்ற உத்தரவிட்டார். இதனால், நிருபர்களுக்கும், நித்யானந்தா சீடர்களுக்கும் கைகலப்பு ஏற்பட்டது. கன்னட நிருபர்களுக்கு அவமரியாதை ஏற்பட்டதாக, சில கன்னட அமைப்புகள் போராட்டத்தில் ஈடுபட்டன.
சீடர்கள் மீது தாக்குதல்: பிடதி ஆசிரமம் முன் போராட்டம் நடத்திய கன்னட அமைப்பினர், நுழைவு வாயில் கேட் வழியாக ஏறிக் குறித்து, உள்ளே இருந்த சீடர்களைத் தாக்கினர். செக்யூரிட்டி அறை கண்ணாடி ஜன்னல்களை அடித்து நொறுக்கினர்; ஆசிரமத்திற்குள் கல் எறிந்தனர். இதில், பாதுகாப்புக்கு வந்த போலீசார், சீடர்கள் காயம் அடைந்தனர். அதைத் தொடர்ந்து போலீசார் தடியடி நடத்தி, போராட்டக் கும்பலை கலைத்தனர்.போராட்டத்தில் ஈடுபட்ட 16 பேர், நித்யானந்தாவின் நான்கு பெண் சீடர்கள் உட்பட எட்டு பேர் என, மொத்தம் 25 பேரை போலீசார் கைது செய்தனர். "நித்யானந்தாவை கைது செய்ய வேண்டும்; பிடதி ஆசிரமத்தை அரசு கையகப்படுத்த வேண்டும் என்ற கோரிக்கைகளை வலியுறுத்தி, அன்று முதல் தொடர்ந்து மாநிலத்தில் சில கன்னட அமைப்பினர் போராட்டம் நடத்தி வருகின்றனர். கலவரம் குறித்து விசாரிக்க, மாவட்ட அமைச்சர் யோகேஸ்வர், போலீஸ் எஸ்.பி., ஆகியோருக்கு உள்துறை அமைச்சர் அசோக் உத்தரவிட்டிருந்தார்.
அறிக்கை தாக்கல்: அவர்களை விசாரித்து, நேற்று காலை 7 மணிக்கு அரசுக்கு அறிக்கை தாக்கல் செய்தனர். அந்த அறிக்கையின் பேரில், நேற்று பகல் 12.30 மணிக்கு, முதல்வர் சதானந்தா கவுடா தலைமையில், விதான் சவுதாவில் உயர்மட்ட அவசரக் கூட்டம் நடந்தது. கூட்டத்தில், உள்துறை அமைச்சர் அசோக், சட்டத்துறை அமைச்சர் சுரேஷ்குமார் உட்பட பலர் கலந்து கொண்டனர். ஒரு மணி நேரம் நடந்த ஆலோசனைக்கு பின்,நிருபர்களிடம் முதல்வர் சதானந்த கவுடா கூறியதாவது: நித்யானந்தா ஆசிரமத்தில் நடந்த கலவரம் குறித்து விசாரிக்க, உள்துறை அமைச்சர் நடவடிக்கை எடுத்து வருகிறார். நித்யானந்தாவுக்கு ஏற்கனவே தேடுதல் வாரன்ட் பிறப்பிக்கப்பட்டுள்ளது. அவரை போலீசார் தேடி வருகின்றனர். அவர் மீதுள்ள ஜாமினை ரத்து செய்து, அவரை கைது செய்ய நடவடிக்கை எடுப்பது என்றும், பிடதி ஆசிரமத்தை தற்காலிகமாக "சீல் வைக்கவும், ஆசிரம நிர்வாகத்தை கவனிக்க நிர்வாக அதிகாரி ஒருவரை நியமிப்பது குறித்து, அடுத்த இரண்டு நாளில் முடிவு செய்வது என்றும் கூட்டத்தில் முடிவு செய்யப்பட்டது என்றார்.
தவிப்பு : அரசு தன் முடிவை அறிவித்ததையடுத்து, பிடதி ஆசிரமத்தில் தங்கியுள்ள நித்யானந்தாவின் சீடர்கள், 200க்கும் மேற்பட்டோர், என்ன செய்வது என தெரியாமல் தவித்து வருகின்றனர். ஆசிரமத்தில் நடந்து வரும் கட்டட வேலைகளுக்காக பிற மாநிலங்களிலிருந்து வந்து தங்கி வேலை பார்த்து வந்த ஊழியர்கள், நேற்று காலி செய்து தங்கள் ஊர்களுக்குச் சென்றனர்.நித்யானந்தாவைத் தேடி தமிழகத்தில் மதுரை, மைசூரு மற்றும் வட மாநிலங்களுக்கு போலீஸ் குழுவினர் சென்றுள்ளது குறிப்பிடத்தக்கது. சேலம் ஓட்டல், ஆசிரமத்தில் போலீசார் தீவிர கண்காணிப்பு: பிடதி ஆசிரமத்தில், பத்திரிகையாளர்களை தாக்கிய வழக்கில் தலைமறைவான நித்யானந்தா, சேலத்தில் பதுங்கியிருப்பதாக வெளியான தகவலை அடுத்து, ஓட்டல், ஆசிரமத்தை போலீசார் தீவிரமாக கண்காணித்து வருகின்றனர்.
மதுரை ஆதீன மடத்துக்கு திரும்பும் நிலையில் நித்யானந்தா, சேலத்தில் உள்ள கிருத்திகா ஓட்டலில் தங்கி, பின்னர் அங்கிருந்து கிளம்பிச் சென்றதாக தகவல்கள் வெளியாகின.இந்த தகவலைத் தொடர்ந்து நேற்று உளவுப்பிரிவு போலீசார், நுண்ணறிவுப் பிரிவு போலீசார், ஓட்டலில் தீவிர விசாரணை நடத்தினர். மேலும், ஓட்டலில் தங்கியிருந்தவர்கள் குறித்த விவரங்களையும் சேகரித்தனர். அது மட்டுமின்றி ஓட்டலை தீவிரமாக கண்காணித்தும் வருகின்றனர்.மேலும், பிடதி ஆசிரமத்துக்கு சொந்தமான பெரியபுதூர் பெருமாள் கோவில் அருகில் உள்ள, ஏழு ஏக்கர் பரந்து விரிந்துள்ள தோட்டத்தில், காவல் பணியில் ஈடுபட்டுள்ள ஊழியர்களிடமும் போலீசார் தீவிர விசாரணை நடத்தினர்.அங்கு நித்யானந்தா வரவில்லை என, காவல் பணியில் ஈடுபட்ட ஊழியர்கள் தெரிவித்தனர். ஊழியர்களின் பதில், போலீசாருக்கு திருப்தி அளிக்கவில்லை. அதையடுத்து, தோட்டத்தையும் போலீசார் தீவிரமாக கண்காணித்து வருகின்றனர்.