நாயகம் தம் தேவைகளுக்காக மற்றவர்களை எதிர்பார்க்க மாட்டார். செருப்பு, உடைகளை தாமே தைத்துக் கொள்வார். ஆடுகளிடம் பால் கறப்பார். வீட்டில் மட்டுமில்லாமல் தோழர்களுடன் சேர்ந்து வேலை செய்வார். மதீனாவில் அவர்கள் கட்டத் தொடங்கிய மஸ்ஜிதுக்காக மற்றவர்களுடன் சேர்ந்து கற்களைச் சுமந்தார். அப்போது தோழர்கள்,‘‘ நீங்கள் ஏன் இப்படி கஷ்டப்பட்டு வேலை செய்ய வேண்டும்?’’ எனக் கேட்டனர். ஆனாலும் அவர் மற்றவர்களுடன் சேர்ந்து பணியாற்றுவதே மேலானது என்றார். ஒரு சமயம் தோழர்களுடன் பயணம் செய்த போது, சமைப்பதற்காக விறகு சேகரிக்கும் பொறுப்பை ஏற்றார். அப்போது தோழர்கள், இந்த வேலையை நாங்களே செய்து கொள்ள முடியும் என்றனர். ‘‘உண்மை தான். ஆனால் உங்களை விட உயர்ந்த இடத்தில் என்னை வைத்துக் கொள்ள விரும்பவில்லை. மற்றவர்களை விட தன்னை மட்டும் உயர்வாக கருதுபவனை இறைவன் நேசிப்பதில்லை’’ என்றார்.