இயற்கை நமக்களித்த வரம் அன்பு. அன்பே வளர்ச்சிக்கான ஊற்று. தொடக்கத்தில் இன்பம் தருவது போலத் தோன்றினாலும், சுயநலம் துன்பத்தில் முடியும். மனதில் அன்பு இல்லாவிட்டால் மனிதன் பெற்ற அறிவு, திறமை, வாழ்க்கை அனுபவம் எல்லாம் பயனற்றுப் போகும். இன்றைய பரபரப்பான வாழ்க்கையில் அன்பு என்னும் சட்டத்திலிருந்து மனிதர்கள் விலக நினைக்கிறார்கள். பரந்து இந்த உலகத்தை மனிதன் படைத்த கருவிகள் இணைக்கின்றன. ஆனால் அவனது மனம் சுருங்கிக் கிடக்கிறது. மனைவி, மக்கள், குடும்பம் தன்னை மையமிட்டே மனிதன் வாழ்க்கை நடத்துகிறான். அன்பு செலுத்துவதை கைவிட்டு பணம், புகழைத் தேடி அலைகிறான். ‘‘நான் அன்பாயிருந்தது போல நீங்களும் ஒருவருக்கொருவர் அன்பாயிருங்கள்’’ என்கிறார் இயேசு. கணவன் மனைவியிடமும், தாய் குழந்தைகளிடமும், மாணவன் நண்பர்களிடமும் காட்டும் அன்பு இயல்பான விஷயமே. நிஜமான அன்பு எதுவென்றால் வேண்டியவர், வேண்டாதவர் என்ற வேறுபாடு இல்லாமல் அனைவரிடமும் அன்பு செலுத்துபவர் தான். இப்படிப்பட்டவர்கள் உப்பைப் போலவும், ஒளியைப் போலவும் உலகிற்கு இன்றியமையாதவர்கள்.