திருப்பரங்குன்றம் தீபத்துாணில் தீபம் ஏற்ற குழு அமைப்பது குறித்து ஆலோசனை
பதிவு செய்த நாள்
23
நவ 2026 05:11
மதுரை: மதுரையில் திருப்பரங்குன்றம் மலை மீதுள்ள தீபத்துாணில் தீபம் ஏற்ற உச்சநீதிமன்றம் உத்தரவுப்படி கமிட்டி அமைப்பது தொடர்பான ஆலோசனை நடந்தது. திருப்பரங்குன்றம் மலைமீதுள்ள தீபத்துாணில் தீபம் ஏற்றுவது தொடர்பான வழக்கில் உயர்நீதிமன்ற மதுரைக் கிளையில் கடந்தாண்டு நவம்பரில் தீர்ப்பு வழங்கப்பட்டது. இதனை எதிர்த்து உச்சநீதிமன்றத்தில் தமிழக அரசு தொடர்ந்த வழக்கில் ‛திருப்பரங்குன்றம் தீபத்துாணில் இன்று ஒருநாள் தீபம் ஏற்றிக் கொள்ளலாம்’ என்றும், அதற்கு மதுரை கலெக்டர் குழு அமைத்து செயல்படுத்த வேண்டும் எனவும் சில பாதுகாப்பு நிபந்தனைகளுடன் அனுமதி அளித்துள்ளது. இந்த தீர்ப்பை எதிர்த்து த.வெ.க., அரசு உச்சநீதிமன்றத்தில் மறுசீராய்வு மனுத்தாக்கல் செய்துள்ளது. இதனை விசாரிக்க கால அவகாசம் இல்லாத நிலையில், மாவட்ட நிர்வாகமும் தமிழக அரசின் அறிவுறுத்துதல்களை எதிர்பார்த்துள்ளது. உச்சநீதிமன்றத்தில் மறுசீராய்வு மனு விசாரணைக்கு வருமா என்பது இன்று இரவு வரை சந்தேகமாகவே இருந்தது. நாளை அதன் நிலை என்ன ஆகுமோ என்ற எதிர்பார்ப்பு அதிகமாக உள்ளது. இந்நிலையில் உச்சநீதி மன்றத்தின் தீர்ப்பை நிறைவேற்றியாக வேண்டிய சூழல் உள்ளதால் அதற்கும் மாவட்ட நிர்வாகம் தயாராக இருக்க வேண்டும். இதனால் அந்நிலையில் எடுக்க வேண்டிய நடவடிக்கைகள் குறித்து கலெக்டர் நிஷாந்த் கிருஷ்ணா தலைமையில் வருவாய், போலீஸ் அதிகாரிகளின் ஆலோசனை கூட்டம் நடந்தது. குழுவில் யார், எத்தனை பேர் இடம்பெறுவர் என ஆலோசிக்கப்பட்டுள்ளது. வருவாய் அதிகாரிகளிடம் விசாரித்த போது, ‘பலதரப்பினரை உள்ளடக்கிய 6 பேர் கொண்ட கமிட்டி இடம் பெற வாய்ப்புள்ளது. இருப்பினும் தலைமைச் செயலாளர் தரப்பிலிருந்து வரும் அறிவுறுத்தல்படி மாவட்ட நிர்வாகம் செயல்படும்’ என்றனர். தீபத்தூணில் வெடிகுண்டு சோதனை: நாளை (நவ., 240 தீபம் ஏற்றப்படுவதை தொடர்ந்து, நேற்று காலை திருப்பரங்குன்றம் மலை உச்சியில் உள்ள தீபத்தூணில் வெடிகுண்டு தடுப்பு பிரிவு நிபுணர்கள் சோதனை மேற்கொண்டனர். திருப்பரங்குன்றம் மலை மேல் செல்பவர்களின் ஆதார், அலைபேசி எண் பதிவு செய்யப்பட்டு அனுமதிக்கப்படுகின்றனர். நாளை கார்த்திகை மகா தீபம் ஏற்றப்படுவதை முன்னிட்டு பக்தர்களுக்கு மலைமேல் செல்ல அனுமதி இல்லை. இன்று காலை நைஜீரியா நாட்டைச் சேர்ந்த 6 சுற்றுலா பயணிகள் மலை மேல் செல்ல வந்தனர். மலை படிக்கட்டுகள் அருகே பாதுகாப்பில் இருந்த போலீசார் அவர்களுக்கு அனுமதி மறுத்து, இரண்டு நாட்களுக்குப் பின்பு கோயில் அலுவலகத்தில் அனுமதி பெற்று வருமாறு கூறி அனுப்பி வைத்தனர். பூஜை பொருட்கள் வழங்கிய ஹிந்து அமைப்பினர்: திருப்பரங்குன்றம் தீபத்தூணில் கார்த்திகை மகா தீபம் ஏற்ற வேண்டும் என்ற உச்சநீதிமன்ற தீர்ப்பை நிறைவேற்றக் கோரி ஹிந்து அமைப்பினர் தீபம் ஏற்றுவதற்குரிய பூஜை பொருட்களை கோயில் நிர்வாகத்திடம் வழங்கினர். ஹிந்து மக்கள் கட்சி மாவட்ட தலைவர் சோலை கண்ணன், சிவ சேனா கட்சி மாநில இளைஞரணி தலைவர் திருமுருக தினேஷ், அகில பாரத அனுமன் சேனா மாநில அமைப்பு பொதுச்செயலாளர் ராமலிங்கம், மாவட்ட தலைவர் சக்திவேல், பா.ஜ., மாநில இளைஞரணி துணைத் தலைவர் வெற்றிவேல் முருகன், வேல்முருகன், வழக்கறிஞர் சூரிய பாண்டி உள்ளிட்ட நிர்வாகிகள் 15 லிட்டர் நெய் டின், தீபம் ஏற்ற ஐந்து லிட்டர் கொள்ளளவு கொண்ட அகல் விளக்கு, 5 மீட்டர் காடா திரி, கற்பூரம், தீப்பெட்டி, வெற்றிலை, பாக்கு, பழங்கள், சந்தனம், விபூதி, குங்குமம், மஞ்சள் பொடி ஆகியவற்றுடன் சன்னதி தெரு சொக்கநாதர் கோயிலில் இருந்து மேளதாளத்துடன் ஊர்வலமாக சென்று கோயில் நிர்வாகத்திடம் ஒப்படைத்தனர்.
|