பதிவு செய்த நாள்
22
ஏப்
2021
03:04
மேட்டுப்பாளையம் : கொரோனா தொற்றால், மண்பாண்ட தொழிலாளர்களின் வாழ்வாதாரம் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளது.
மண்பானைகளை மக்கள், முன்போல் சமையலில் அதிகம் பயன்படுத்துவதில்லை. அவற்றுக்கான தேவை குறைந்துவிட்டதால், மண்பாண்ட தொழிலாளர்கள், கோவில்களில் வேண்டுதலுக்காக வைக்கப்படும், உருவ பொம்மை உற்பத்தியை மட்டுமே நம்பியுள்ளனர். கொரோனா தொற்றால், கடந்த இரு ஆண்டுகளாக, திருவிழாக்கள் நடைபெறவில்லை. இதனால் மண்பாண்டங்கள் செய்யும் தொழிலாளர்களின் வாழ்வாதாரம் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளது.
இதுகுறித்து மருதுாரைச் சேர்ந்த மண்பாண்டக் கலைஞர் பழனிசாமி கூறியதாவது: மாரியம்மன், மதுரைவீரன், கருப்பராயன், முனியப்பன், தன்னாசியப்பன் உள்ளிட்ட கோவில்களில் மண் பொம்மைகளை, பக்தர்கள் வேண்டுதலுக்காக காணிக்கையாக வழங்குவர். இவற்றில், அதிகமாக குதிரைகளையும், கால் பாத பொம்மைகளையும் நேர்த்திக்கடனாக செலுத்துவர். ஆண்டுக்கு 25-ல் இருந்து, 30 குதிரைகள் செய்யப்படும். களிமண், செம்மண், மணல் கலவையில், ஒரு குதிரை செய்ய இருபது நாட்கள் ஆகும். இதன் விலை, 10 லிருந்து, 12 ஆயிரம் ரூபாய் வரை ஆகும்.
இந்த உருவ பொம்மைகளுடன், மண்பாண்டங்கள் செய்து, கிடைக்கும் வருவாயில் வாழ்ந்து வந்தோம். கொரோனா பிரச்னையால், கடந்த இரு ஆண்டுகளாக திருவிழாக்கள் நடைபெறவில்லை. இதனால் செய்து வைத்த, மண் குதிரைகளை வாங்க பொதுமக்கள் யாரும் முன்வரவில்லை. இத்தொழிலை மட்டுமே நம்பியுள்ள எங்களைப் போன்றவர்களின் வாழ்வாதாரம் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளது.மண் சட்டிகளை, மக்கள் அதிகம் பயன்படுத்துவதில்லை. இதே நிலை நீடித்தால் இத்தொழில் அழிந்துவிடும். தற்போது ஒரு சிலர் மண்பாண்டங்களை பயன்படுத்துகின்றனர். அவர்களுக்காக மண் பாண்டங்களை உற்பத்தி செய்யும் பொழுது, விலையும் சற்று கூடுதலாக விற்பனை செய்ய வேண்டியுள்ளது. எனவே மண்பாண்டங்களை செய்யும் தொழிலாளர்களுக்கு அரசு சலுகைகள் வழங்கி, மண்ணை எடுத்து வருவதற்கு இலவச பாஸ் வழங்க வேண்டும்.இவ்வாறு, பழனிசாமி கூறினார்.