பதிவு செய்த நாள்
22
ஏப்
2021
03:04
பெ.நா.பாளையம : பெரியநாயக்கன்பாளையம் அருகே செல்வபுரத்தில், மங்களாம்பிகை உடனமர் பிராணநாதர் ஆலய கட்டுமான பணி நடந்து வருகிறது.
தஞ்சை மாவட்டம், திருமங்கலக்குடியில், மங்களாம்பிகை உடனமர் பிராணநாதர் கோவில் உள்ளது. அக்காலத்தில் சோழ மன்னனிடம் பணியாற்றி வந்த தளபதி ஒருவர், படைகளுக்கு ஆயுதங்கள் தயாரிப்பதற்காக மன்னன் கொடுத்த பணத்தை, கோவிலை கட்டுவதற்கு செலவழித்தார்.இதை அறிந்த மன்னன், தளபதியின் மீது குற்றம்சாட்டி, சிரச்சேதம் செய்ய உத்தரவிட்டார். அப்போது, அந்த தளபதி, தனது உடலை, கோவில் அமைந்துள்ள வழியில் எடுத்துச் செல்ல விருப்பம் தெரிவித்தாராம்.
அந்த கோவில் வழியாக, தளபதியின் உடலை எடுத்துச் செல்லும்போது, தளபதியின் மனைவி, உன்னுடைய கோவிலை கட்டுவதற்காகத்தான் என் கணவர் இச்செயலில் ஈடுபட்டார். ஆனால், அவரது உயிர் போய் விட்டதே, மீண்டும் உயிர்பிக்க மாட்டாயா என, கண்ணீர் சிந்தி உள்ளார். அப்போது, சிவன் அம்பிகையுடன் எழுந்தருளி, தளபதிக்கு உயிர் கொடுத்தார் என்பது ஐதீகம். இதனால், இக்கோவிலில் எழுந்தருளியுள்ள சிவன், பிராணநாதர் என்று அழைக்கப் படுகின்றார். பெரியநாயக்கன்பாளையம் அடுத்த, செல்வபுரத்தில், மங்களாம்பிகை உடனமர் பிராணநாதர் ஆலயம் கட்டப்பட்டு வருகிறது.
சோழர் கால சிற்பக் கலையைப் பின்பற்றி, ஆகம விதிகளுடன், கட்டப்பட்டு வரும், இக்கோவில் வளாகத்திலேயே, முருகன், விநாயகர், கால பைரவர், சண்டிகேஸ்வரர், மங்களாம்பிகை, நந்தியம்பெருமான் ஆகியோருக்கு தனித்தனி சன்னதிகள் கட்டப்பட்டு வருகின்றன.தட்சிணாமூர்த்தி, லிங்கோத்பவர், பிரம்மா ஆகிய தெய்வங்களும் நிர்மாணிக்கப் பட உள்ளன. கோவில் கோபுரங்களில், பஞ்ச வர்ணங்கள் பூசப்பட்டு வருகின்றன. நவ கிரக தோஷ, பரிகார ஸ்தலமாக பெரும் பொருட்செலவில், இக்கோவில் உருவாகி வருகிறது.