வில்லுப்பாட்டு சுப்பு ஆறுமுகம் காஞ்சி மகாபெரியவரின் பக்தர். பெரியவரிடம் கதைகளைக் கேட்டு அவற்றை வில்லுப்பாட்டின் இடையே மக்களுக்கு எடுத்துச் சொல்வார். சுப்பு ஆறுமுகம் மடத்திற்கு வந்தால், ‘‘இன்னிக்கு உனக்குச் சொல்ல ஒரு கதை வைத்திருக்கிறேன்’’ என பெரியவர் சொல்வதுண்டு. அன்றும் அப்படித்தான். மடத்திற்கு வந்தபோது, ‘‘மனம் வருந்திய பசுவின் பால் கடைசியில் தெளிவு பெற்ற கதையை சொல்லப் போகிறேன்’’ என்றார். அவரும் ஆர்வமுடன் தயாரானார். ‘‘பசுவின் உடம்பில் சவுக்கியமாக இருந்தது பால். அதைக் கறந்து பானையில் ஊற்றி அடுப்பில் சூடாக்கினாள் ஒரு பெண். பால் தன் மனதிற்குள் ‘‘நாம் பேசாமல் பசுவின் உடம்பிலேயே இருந்திருக்கலாம். சூடு தாங்க முடியவில்லையே?’’ என வருந்தியது. பால் காய்ந்ததும் அடுப்பிலிருந்து இறக்கி அதை ஆற வைத்தாள். பாலில் கொஞ்சம் புளித்த மோரை விட்டு உறை குத்தினாள். அடடா, புளிப்பு தாங்கலையே? நாம் உறைந்து விடப் போகிறோம் என அப்போது பால் வருந்தியது. அது தயிரான பிறகாவது வருத்தம் தீர்ந்ததா? மறுநாள் காலையில் அவள் தண்ணீர் விட்டு ஊற்றி மத்தால் கடையத் தொடங்கினாள். அங்குமிங்கும் அலைக்கழிந்து அது பட்ட கஷ்டம் கொஞ்ச நஞ்சமல்ல. தயிர் மோராகி அதிலிருந்து வெண்ணெய் திரளத் தொடங்கியது. அதோடு கஷ்டம் போனதா? வெண்ணெய்யை அடுப்பில் வைத்துக் காய்ச்சினாள். உருகி நெய்யானது. அதை ஜாடியில் ஊற்றி மூடினாள். அன்று அவள் பக்கத்துவீட்டு பெண்ணிடம் சுவாரஸ்யமாகப் பேசுவதை ஆர்வமுடன் கேட்டது ஜாடிக்குள் இருந்த நெய். ‘‘இப்போதெல்லாம் நெய் என்ன விலை விற்கிறது தெரியுமா? பால் என்றால் மலிவாக வாங்க விடலாம். நெய்யை வாங்கினால் கட்டுப்படியாகுமா? அதனால் பாலில் உறைகுத்தி தயிராக்கி வெண்ணெய் எடுப்பேன். அதை உருக்கி நெய்யை நானே தயாரித்து விடுவேன்’’ என்றாள். பக்கத்து வீட்டுப் பெண், ‘‘பாடுபட்டால் பலன் இல்லாமல் போகுமா? பாலை விட நெய் விலை பலமடங்கு அதிகமாச்சே’’ என்றாள். அதைக் கேட்டதும் நெய்யின் வருத்தம் காணாமல் போனது. நெய்யாக மாறியதை எண்ணி மகிழ்ச்சி அடைந்தது. கஷ்டம் வந்தால் மனிதன் அதை பொறுமையுடன் சகிக்க வேண்டும். கஷ்டங்களால் புடம் போடப்பட்டு இறுதியில் மதிப்பு உயரப் போகிறது என்பதை உணர வேண்டும். நெய் போல மதிப்பு உயர வேண்டுமானால் பால் போல கஷ்டப்பட்டுத் தானே ஆக வேண்டும்’’ பாலை வைத்தே அரிய தத்துவத்தை விளக்கிய மகாபெரியவரை வணங்கினார் சுப்பு ஆறுமுகம்.