சீதையை திருமணம் புரிந்த ராமர் அயோத்திக்குத் திரும்பினார் ராமர். மக்கள் அவர்களை வாழ்த்தி பலவிதமான பரிசுகளை அளித்துக் கொண்டிருந்தனர். மித்ரபந்து என்னும் செருப்புத் தைக்கும் தொழிலாளி ஒருவனும் அதில் இருந்தான். ராமனுக்கு கொடுப்பதற்காக இரு பாதுகைளை கொண்டு வந்திருந்தான். மற்றவர் கைகளில் இருந்த விலை உயர்ந்த பரிசுகளைக் கண்டதும் மித்ரபந்து வருந்தினான். ‘‘அற்ப பாதுகைகளையா தருவது?’’ என எண்ணி ராமரைப் பார்க்காமலேயே திரும்ப முடிவெடுத்தான்.
அதைக் கவனித்த ராமர் அருகில் அழைத்து, ‘‘உண்மையான உழைப்பில் உருவான பரிசே அனைத்திலும் உயர்ந்தது’’ என்றார். அதைக் கேட்டு மனம் நெகிழ்ந்தான் மித்ரபந்து. வனவாசம் புறப்பட்ட போது, ‘‘தாயே... காட்டுக்குச் செல்லும் நான் எதையும் எடுத்துச் செல்லக் கூடாது தான். இருப்பினும் இந்தப் பாதுகைகளை அணிந்து செல்ல அனுமதியுங்கள்’’ என ராமர் அனுமதி பெற்றார். அரண்மனைக்கு வெளியே கூட்டத்தில் கண்ணீருடன் நின்ற மித்ரபந்துவை பார்த்ததும்,
‘‘விலை உயர்ந்த பரிசுகள் ஏதும் எனக்கு உதவ வில்லை. நீ அளித்த பாதுகைகள் தான் என் கால்களைக் காக்கப் போகின்றன’’ என்றார். அன்பின் அடையாளமான அந்தப் பாதுகைகள் அயோத்தியின் அரியணையில் அமர்ந்து பதினான்கு ஆண்டுகள் ஆட்சியும் புரிந்தன. கடவுளுக்கு யார், என்ன செய்கிறார்கள் என்பது முக்கியமல்ல. முடிந்ததை பக்தியுடன் கொடுப்பது தான் அவரை மகிழ்ச்சிப்படுத்தும்.