சாஸ்திர விரோதமாக யார் நடந்தாலும், பேசினாலும் ராமனுக்குப் பிடிக்காது. மனைவியைக் கடத்திய ராவணன் மீது கூட இரக்கம் கொண்டு, இன்று போய் நாளை வா என்றவரையே, கடும் கோபத்திற்கு உள்ளாக்கினார் ஜாபாலி ரிஷி. ராமா! மறைந்த பெற்றோருக்கு இங்கிருந்து பிண்டம் கொடுப்பது அவர்களைப் போய்ச் சேரும் என்கிறாயே! அதெப்படி சாத்தியம்? அப்படி போனதை பார்த்தவர்கள் யாராவது உண்டா? மறைந்த பிறகு தந்தையாவது, மகனாவது...” என்றார் ஜாபாலி ரிஷி. இதைக் கேட்டதும் ராமனுக்கு கண்கள் சிவந்தன.மகரிஷியே! என்ன சொல்கிறீர்கள்? சாஸ்திர விரோதமாக பேசாதீர்கள். வேதத்தில் இந்த தர்மம் சொல்லப்பட்டிருக்கிறது. நீர் சொல்வதைப் பார்த்தால் வேதமே அல்லவா தவறாகி விடும்! எல்லாவற்றுக்கும் அச்சாரம் வேதம்,” என்று கடிந்து பேசினார்.ஜாபாலி நடுங்கி விட்டார்.அப்பா ராமா! அது எனக்கும் தெரியும். ஆனால், உன் வாயால் இந்த வார்த்தைகள் தெளிவாக வரட்டுமே என்று தான், உனக்கு கோபமூட்டினேன். என்னை நாத்திகன் என எண்ணிக் கொள்ளாதே,” என்ற பின் ராமன் சமாதானம் ஆனான்.