குமரகோட்டம் கோவிலில் இறுதிக்கட்ட பணிகள் மும்முரம் நவம்பரில் கும்பாபிஷேகம்
பகிர்கcopied
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
13அக் 2026 10:10
காஞ்சிபுரம்: காஞ்சிபுரம் குமரகோட்டம் சுப்பிரமணிய சுவாமி கோவிலில் 80 சதவீத திருப்பணிகள் நிறைவடைந்துள்ள நிலையில், நவம்பரில் கும்பாபிஷேகம் நடத்துவதற்கான ஏற்பாடுகள் நடைபெற்று வருகின்றன.
இக்கோவிலின் ராஜகோபுரம், ரிஷி கோபுரம், வரலாற்றுச் சிறப்புமிக்க கந்தபுராண மண்டபம் உள்ளிட்ட பல்வேறு சன்னதிகளைப் புனரமைக்கும் பணிகள் உபயதாரர்களின் நிதியுதவியுடன் மேற்கொள்ளப்படுகின்றன. கோவில் திருப்பணிகளுக்காக கடந்த 2024 பிப்., 26-ம் தேதி பாலாலயம் நடைபெற்றது. தொடர்ந்து, 66.48 லட்சம் ரூபாய் மதிப்பீட்டில் 16 வகையான சீரமைப்புப் பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. தற்போது இறுதிக்கட்டப் பணிகள் தீவிரமாக நடைபெறுவதால், பக்தர்கள் மகிழ்ச்சியடைந்துள்ளனர். இதுகுறித்து கோவில் செயல் அலுவலர் கேசவன் கூறியதாவது: கோவிலில் திருப்பணிகள் 80 சதவீதம் நிறைவடைந்துள்ளன. எஞ்சியுள்ள பணிகளும் தீவிரமாக நடைபெற்று வருகின்றன. கும்பாபிஷேகத்திற்கான உத்தேச தேதிகள் குறித்து சிவாச்சாரியார்களிடம் ஆலோசிக்கப்பட்டு, நவம்பர் மாதத்தில் சில விசேஷ தேதிகள் பெறப்பட்டுள்ளன. ஹிந்து சமய அறநிலையத் துறை உயர் அதிகாரிகளின் ஒப்புதல் கிடைத்ததும், கும்பாபிஷேகத்திற்கான அதிகாரப்பூர்வ தேதி முறைப்படி அறிவிக்கப்படும். இவ்வாறு அவர் கூறினார்.