பதிவு செய்த நாள்
24
ஏப்
2021
05:04
தஞ்சாவூர்: கொரோனா எதிரொலியால், தஞ்சாவூர் பெரியகோவில் மூடப்பட்ட நிலையில், பக்தர்கள் இன்றி இன்று(24ம் தேதி) சனி பிரதோஷம் எளிமையாக நடந்தது. உலக புகழ் பெற்ற தஞ்சாவூர் பெரியகோவிலில் பிரதோஷ வழிபாட்டின் போது பக்தர்கள் அதிகளவில் வருகை தருவார்கள். பால், வில்வம்,மஞ்சள்,சந்தனம், தயிர் ஆகிய மங்கல பொருள்களை கொண்டு நந்தியம் பெருமானுக்கு அபிஷேகம் நடத்தப்படுவது வழக்கம்.
இந்நிலையில், கொரோனா எதிரொலியாக, கடந்த ஏப்.16ம் தேதி கோவில் மூடப்பட்டது. இருப்பினும், கோவிலில் தினமும் நான்கு கால பூஜைக்கள் வழக்கம் போல நடந்து கொண்டு இருக்கிறது. இருப்பினும், கோவிலில் பக்தர்கள் அனுமதிக்கப்படாத நிலையில், ஆங்கில வருடத்தின் முதல் சனி பிரதோஷமான இன்று (24ம் தேதி)பக்தர்கள் இன்றி நந்தியம் பெருமானுக்கு பால்,மஞ்சள்,சந்தனம் போன்ற மங்கல பொருள்களை கொண்டு சிவச்சாரியார்கள் மட்டுமே பிரதோஷ வழிபாட்டை நடத்தினர். பிரதோஷத்தின் போது பக்தர்கள் இன்றி பெரியகோவில் வெறிச்சோடி காணப்பட்டது. இதை போல கடந்த 2020ம் ஆண்டு பக்தர்கள் இன்றி 12 முறை பிரதோஷ வழிபாடு நடந்துள்ளது குறிப்பிடத்தக்கது.