பதிவு செய்த நாள்
27
ஏப்
2021
11:04
திருவண்ணாமலை, அருணாசலேஸ்வரர் கோவிலில், சித்ரா பவுர்ணமி கிரிவலம் செல்ல தடை விதிக்கப்பட்டுள்ளதால், பக்தர்கள் யாரும் செல்லாதவாறு, கிரிவலப்பாதையில் தடுப்பு அமைத்து போலீசார் கண்காணிப்பு பணியில் ஈடுபட்டனர்.
திருவண்ணாமலை, அருணாசலேஸ்வரர் கோவிலில், சித்ரா பவுர்ணமியையொட்டி வழக்கமாக, 10 லட்சத்துக்கும் மேற்பட்ட பக்தர்கள் கிரிவலம் செல்வர். கொரோனா ஊரடங்கால், கடந்த, 2020, மார்ச் மாதம் முதல், பவுர்ணமி கிரிவலம் செல்ல தடை விதிக்கப்பட்டுள்ளது. இருப்பினும் கடந்த இரண்டு மாதங்களாக தடையை மீறி, குறைந்தளவு பக்தர்கள் கிரிவலம் சென்றனர். ஆனால், தற்போது கொரோனா பரவல் அதிகரித்து வரும் நிலையில், அரசு கடும் கட்டுப்பாடுகளை விதித்துள்ளது. சித்ரா பவுர்ணமி திதி, நேற்று மதியம், 12:16 முதல், இன்று, காலை, 9:59 மணி வரை உள்ளது. இதனால், கிரிவலப்பாதை முழுவதும் தடுப்பு வேலி அமைத்து, போலீசார் கண்காணிப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர். கிரிவலப்பாதையில், வெளிமாவட்டத்தை சேர்ந்த வாகனங்கள் செல்ல அனுமதிக்கப்படவில்லை. இதனால், கிரிவலப்பாதை வெறிச்சோடியது. மேலும், கோவிலினுள் குறைந்தளவே பக்தர்கள் அனுமதிக்கப் படுகின்றனர். இதனால், சுவாமி தரிசனம் செய்ய முடியாமல் பெரும்பாலான பக்தர்கள் ஏமாற்றத்துடன் திரும்பிச்சென்றனர்.