மானாமதுரை சித்திரை திருவிழா: நிலாச்சோறு நிகழ்ச்சி ரத்து
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
29ஏப் 2021 04:04
மானாமதுரை,ஏப்.29- மானாமதுரை சித்திரை திருவிழாவில் நிலாச்சோறு நிகழ்ச்சி நேற்று ரத்து செய்யப்பட்டதால் பொதுமக்கள் மிகுந்த ஏமாற்றம் அடைந்தனர், இறைச்சிக் கடையில் வியாபாரம் பெருமளவில் இல்லாததால் வெறிச்சோடின கிடந்தன. மானாமதுரை வீர அழகர் கோயிலில் கடந்தாண்டு சித்திரை திருவிழா நடைபெறாத நிலையில் இந்த ஆண்டு உள் திருவிழாவாக சித்திரைத் திருவிழா நடைபெற்று வருகிறது.நேற்று முன்தினம் கோயிலுக்குள்ளேயே வீர அழகர் பச்சை பட்டு உடுத்தி கள்ளழகர் வேடம் பூண்டு எழுந்தருளினார்.இதனைத் தொடர்ந்து நேற்று நடைபெறும் நிலாச்சோறு நிகழ்ச்சி ரத்து செய்யப்பட்டதால் பொதுமக்களும் பக்தர்களும் மிகுந்த ஏமாற்றம் அடைந்தனர். நிலாச்சோறு நிகழ்ச்சி நடைபெறும் நாளன்று இரவு வைகை ஆற்றுக்குள் மானாமதுரை மற்றும் அதன் சுற்றுவட்டார கிராம பகுதிகளில் இருந்து வருகை தரும் மக்கள் சைவம் மற்றும் அசைவ உணவு வகைகளை சமைத்துக் கொண்டு வந்து ஆற்றுக்குள் உட்கார்ந்து உறவினர்கள், நண்பர்களோடு சேர்ந்து நிலவொளியில் சாப்பிட்டு மகிழ்வர்.மேலும் இந்நிகழ்ச்சியில் மத நல்லிணக்கத்திற்கு எடுத்துக்காட்டாக கிறிஸ்தவர்களும் முஸ்லிம்களும் சைவ, அசைவ உணவுகளை சமைத்துக் கொண்டு வந்து வைகை ஆற்றுக்குள் அமர்ந்து சாப்பிட்டு செல்வர்.இந்நிலையில் கடந்த 2 ஆண்டுகளாக இந்த நிகழ்ச்சி நடைபெறாமல் உள்ளதால் பொதுமக்களும் பக்தர்களும் மிகுந்த ஏமாற்றம் அடைந்துள்ளனர் மேலும் அன்றைய தினம் மானாமதுரை பகுதியில் உள்ள இறைச்சிக் கடைகளில் அதிக அளவில் வியாபாரமும் நடக்கும். நேற்று நிலாச்சோறு நிகழ்ச்சி நடைபெறாததால் இறைச்சிக்கடைகளில் பெரும்பாலும் கூட்டம் இன்றி வெறிச்சோடி கிடந்தன.