திண்டுக்கல் : கொரோனா கட்டுப்பாடுகளில் மக்கள், வணிகர்களின் நலன் கருதி சலுகைகள் அளிக்க வேண்டும் என, திண்டுக்கல் தொழில் வர்த்தக சங்கத்தினர் முதல்வருக்கு கோரிக்கை விடுத்துள்ளனர்.
மாவட்ட தலைவர் கிருபாகரன் எழுதியுள்ள கடிதம்: அனைத்து வழிபாட்டு தலங்களிலும் குறிப்பிட்ட அளவில் விதிகளுக்குட்பட்டு தரிசனம் செய்ய அனுமதிக்க வேண்டும். தற்போது உணவகங்கள், தேநீர் கடைகளில் அமர்ந்து சாப்பிட அனுமதி மறுக்கப்பட்டுள்ளது. இதனால் வியாபாரிகள், வெளியூர் பயணிகள் சிரமத்திற்கு ஆளாகின்றனர். எனவே, போக்குவரத்து அதிகமுள்ள இடங்கள் அல்லது குறிப்பிட்ட நபர்கள் மட்டும் அமர்வது உள்ளிட்ட சலுகைகளை நிபந்தனைக்குட்பட்டு அனுமதி அளிக்க வேண்டும். குளிர்சாதனம் பயன்படுத்தாத சலூன்களுக்கு அனுமதி மற்றும் காலை 8:00 மணி முதல் மதியம் 2:00 மணி வரை திறக்க வாயப்பளிக்க வேண்டும். இல்லையேல் அவர்களுக்கு அரசு நிதியளிக்க வேண்டும். கொரோனாவால் ஒட்டுமொத்த வணிகர்களும் பாதித்துள்ளனர். இந்நிலையிலும் அதிகாரிகள் சோதனை என்ற பெயரில் பெரிய தொகையை அபராதமாக விதிக்கின்றனர். ஒரு முறை எச்சரிக்கை அல்லது தொகை குறைத்து வணிகர்களின் நலன் பேண வேண்டும். இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.