பதிவு செய்த நாள்
29
ஏப்
2021
04:04
மேட்டுப்பாளையம்: கொரோனா வைரஸ் தொற்று பாதித்தவர்களின் எண்ணிக்கை, அதிகரித்து வருவதையடுத்து, அரசு அலுவலகங்களிலும், கோவில்களிலும் கிருமி நாசினி மருந்து தெளிக்கப்படுகிறது.
கோவை மாவட்டத்தில், கொரோனா வைரஸ் தொற்று பரவுதலை கட்டுப்படுத்த, கட்டாயம் முகக்கவசம் அணிய வேண்டும், சமூக இடைவெளி கடைபிடிக்க வேண்டும் என, மாவட்ட நிர்வாகம் அறிவித்துள்ளது. பல்வேறு பணிகளுக்கு, அரசு அலுவலகங்கள், வங்கிகளுக்கு பொதுமக்கள் வந்து செல்கின்றனர். இதனால் கொரோனா தொற்று பரவ வாய்ப்பு உள்ளதை அடுத்து, அரசு அலுவலங்களுக்கு, கிருமிநாசினி மருந்து தெளிக்கும் படி, மாவட்ட நிர்வாகம் உத்தரவிட்டுள்ளது. இதுகுறித்து பேரூராட்சி செயல் அலுவலர் சுரேஷ் குமார் கூறியதாவது: காரமடை பேரூராட்சி பகுதிகளில், நோய்த் தொற்று தடுப்பு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகின்றன. மக்கள் அதிகம் வந்து செல்லும், பஸ் ஸ்டாண்ட், வங்கிகள், கூட்டுறவு வங்கிகள், அரசு அலுவலகங்களில், கிருமி நாசினி மருந்து தெளிக்கப்பட்டு வருகின்றன. மேலும் நகரில் வீதிகளில் குளோரின் பவுடர் தூவப்படுகிறது. ஒரு வீதியில் வைரஸ் தொற்று மூன்று பேருக்கு மேல் தாக்கி இருந்தால், அந்த வீதியில் தடுப்புகள் வைத்து அடைக்கப்படுகிறது. எனவே பொதுமக்கள் முகக்கவசம் அணிந்து வெளியே வரவேண்டும். சமூக இடைவெளியை கடைபிடிக்க வேண்டும். இவ்வாறு செயல் அலுவலர் கூறினார். துப்புரவு ஆய்வாளர் மாரியப்பன், மேற்பார்வையாளர் கார்த்திக் மற்றும் பொது சுகாதார பணியாளர்கள் ஆகியோர் கிருமிநாசினி மருந்து தெளிக்கும் பணிகளில் ஈடுபட்டனர்.