இன்றைய நாகரிக உலகில் எளிமையை யாரும் விரும்புவதில்லை. கடன் வாங்கியாவது பகட்டாக வாழவே மனிதர்கள் ஆசைப்படுகிறார்கள். எளிமையான வாழ்வின் சிறப்பு பற்றி கிறிஸ்டோபர் முர்ரே என்னும் அறிஞர் ஆய்வு மேற்கொண்டு கருத்தை வெளிப்படுத்தியுள்ளார். எளிமை பணம் பற்றிய கவலையை ஒழிக்கிறது. வாழ்க்கைக்கு உதவாத மனக்குழப்பம், வீண் ஆரவாரத்தை நம்மிடம் இருந்து விரட்டுகிறது. பணம் தராத மகிழ்ச்சியை, அன்பை நமக்குத் தருகிறது. மனஅழுத்தத்தைப் போக்கி நிம்மதி அளிக்கிறது. செயற்கையான ஆடம்பரப் பொருள்களை தவிர்த்தால் சுற்றுப்புறச் சூழல் பாதுகாக்கப்படும். நம்முடைய தேவைகள், ஆசைகள் குறைய குறைய மற்றவர்களுடன் முரண்பாடு ஏற்படாது. சக மனிதர்களிடம் சுமூக உறவு ஏற்படும் என்கிறார். அத்யாவசிய தேவைக்கு மட்டுமே பணத்தைச் செலவு செய்தல், வாழ்க்கைக்கு எது தேவையோ அதை மட்டும் வாங்குதல் போன்ற வழிமுறைகளைக் கையாண்டால் வாழ்க்கை சிறப்பாக இருக்கும். பகட்டான வாழ்க்கை தேவையில்லை என்கிறது பைபிள். ‘‘மாபெரும் செல்வத்தை விட நற்பெயர் சிறந்தது’’ ‘‘அருமையான தைலத்தை விட நல்ல பெயர் சிறந்தது’’ இதை புரிந்து கொண்டால் இந்த நிமிடமே ஆடம்பர எண்ணம் நம்மை விட்டு ஓடி விடும்.